கன்னியாகுமரியில் பா.ஜ.க முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பாரதப் பிரதமர் மோடி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய நாளை மறுநாள் வருகிறார்.
இங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். பிரதமர் மோடியின் வருகையால், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, பாரதப் பிரதமர் மோடி 18-ம் தேதி சேலத்தில் நடைபெறும் பிரமாண்ட நிகழ்ச்சியிலும், 19-ம் தேதி கோவையில் நடைபெறும் விழாவிலும் கலந்து கொள்கிறார்.
மீண்டும் பிரதமராக மோடியே வரவேண்டும் என விரும்பும் கட்சிகள் அனைத்தையும் நாங்கள் முழுமனதுடன் வரவேற்கிறோம். அந்த வகையில், சமத்துவ மக்கள் கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்ததை முழு மனதுடன் வரவேற்கிறேன். தமிழகத்தில், தி.மு.கவை மிஞ்சும் அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி பலமாக அமைந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் மோடியும், பாரதிய ஜனதா கட்சியும் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. கோடிக்கணக்கான திட்டங்களை நாட்டுக்கு கொடுத்துள்ளது. பிரதமர் மோடி மீது பொது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. நலத்திட்டங்களை நாட்டு மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்குகேட்போம். வெற்றி பெறுவோம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், விளவங்கோடு சட்டசபை தொகுதியில் பா.ஜ.க சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்று தலைமை முடிவு செய்யும் என்றார்.