சென்னை பெருங்குடியில் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான குடோனில், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக், திமுக சென்னை மேற்க மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக பதவி வகித்து வந்தார். போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் சூடோபெட்ரின் எனும் பொருள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட விவகாரத்தில் ஜாபர் சாதிக் சிக்கினார்.
அவரது கூட்டாளிகளான சென்னை முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக் குமார் ஆகிய 3 பேரை டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதனால், ஜாபர் சாதிக் தலைமைறைவானர். அவரை தேடி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சென்னையில் முகாமிட்டனர். ஜாபர் சாதிக் வீட்டில் ரெய்டு நடத்தி சீல் வைத்தனர். ஜாபர் சாதிக்கிற்கு லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதனிடையே, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியில் பதுங்கி இருந்த ஜாபர் சாதிக்கை டெல்லி போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். தற்போது அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, இந்த விவகாரத்தில், நேற்று கைதான ஜாபர் சாதிக் கூட்டாளி திருச்சி சதா என்பவர் அளித்த தகவலின்பேரில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று சென்னையில் உள்ள ஜாபர் சாதிக் குடோனில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில், குடோனில் ராகி மாவுடன் போதைப் பொருள் கலப்படம் செய்து கடத்தியது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், போதைப் பொருள் கடத்தல் தொடர்பான நெட்வொர்க் பற்றிம், அதன் தொடர்புடைய நபர்கள் பற்றியும் டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.