புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி சார்பில் மருத்துவத் திறன் மற்றும் உருவக நிழல் பயிற்சி பட்டறை ஜிப்மர் வளாகத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த முகாமை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சி.ஏ.ஏ. சட்டம் என்பது குடியுரிமையைப் பறிக்கும் சட்டம் அல்ல. குடியுரிமை கொடுக்கும் சட்டம். சட்டப்படி அனைவருக்கும் குடியுரிமை வழங்குவது தான் இந்த சட்டத்தின் நோக்கம். இந்த சட்டத்தை மாநில அரசுகள் அமல்படுத்தமாட்டோம் என்று சொல்வதற்கு வேலை இல்லை. இது மத்திய அரசின் சிறந்த திட்டம்.
சி.ஏ.ஏ. சட்டம் சிறுபான்மையினர் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவே கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை சிறுபான்மை மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்று உள்ளனர். இந்த சட்டத்தைப் படித்தால், அதில் உள்ள நல்ல விசயங்கள் தெரிய வரும்.
தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை பற்றி குஷ்பு பேசிய கருத்து திரித்துக் கூறப்பட்டுள்ளது. அவர் உள்நோக்கத்தோடு பேசும் நபர் அல்ல. அப்படி பேசியும் இருக்கமாட்டார் என்றார்.