பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு வயது 81. இருப்பினும் அவர் தற்போது, இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கி வரும் ‘கல்கி 2989 ஏடி’என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேபோல, சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் ‘வேட்டையன்’ படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் அமிதாப் பச்சன் காலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது காலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடிகர் அமிதாப் பச்சனுக்கு, சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.