இதனிடையே நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியதற்கு பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகள் பங்குபெறுகின்றன.
அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.
ஐ.பி.எல். தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.
முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை முழுமையாக வெளியிடாமல் முதல் 17 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
ஏனெனில் இந்தியாவில் பொது தேர்தல் நடைபெறுவதால் அந்த தேதியை வைத்தே ஐபிஎல் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது. அதேபோல் அணி நிர்வாகங்கள் தரப்பில் வீரர்களின் பாஸ்போர்ட் வாங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
கொரோனா பரவலின் போது எப்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டதோ, அதேபோல் இப்போது நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்த நிலையில் இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா விளக்கம் அளித்துள்ளார். அதில், ஐபிஎல் தொடர் எந்த காரணத்தை கொண்டு வெளிநாட்டிற்கு மாற்றம் செய்யப்படாது என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ஐபிஎல் தொடர் முழுமையாக இந்தியாவிலேயே நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்ப ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.