திருச்சியில் இருந்து பேப்பர் பண்டல்களை ஏற்றிக் கொண்டு, சென்னை நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி இன்று காலை விழுப்புரம் அருகே உள்ள ஜானகிபுரம் மேம்பாலத்தில் வந்தபோது திடீரென நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளானது.
இதில், கண்டெய்னர் லாரியின் முன்புறம் மேம்பாலத்திற்கு மேலிருந்து கீழே தொங்கியது. இதனால், லாரியில் இருந்த பேப்பர் பண்டல்கள் மேம்பாலத்தில் சிதறியது.
இதனால், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருப்புறத்திலும் சுமார் 10 கி.மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது.
இது குறித்துத் தகவலறிந்த விழுப்புரம் போலீசார் கிரேன் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் கண்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சொந்த ஊர் சென்றுவிட்டுச் சென்னை திரும்புவர்கள், பல்வேறு காரணங்களுக்குச் சென்னையில் இருந்து வெளியூர் சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்பி வரும் நிலையில், இந்த விபத்து காரணமாக அவர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் சென்னைக்கு வரமுடியாமல் தவித்த வண்ணம் உள்ளனர்.
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு, பொது மக்களுக்குப் பெரும் துன்பம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.