திமுக அரசின் தவறான முடிவை கண்டிக்கும் வகையில், திருச்சி மக்களவைத் தொகுதியில், 25 வேட்பாளர்களை நிறுத்த, ஸ்ரீரங்கத்தில் உள்ள அடிமனை உரிமை கோரும் போராட்டக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
திருச்சி அருள்மிகு திருவானைக்காவல் திருக்கோவில் நிலம் பத்திரப்பதிவு தொடர்பாக, கோவில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கும், நில உரிமை கோரும் நபர்களுக்கும், திருக்கோவில் நிர்வாகத்துக்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது.
இதனால், திருவானைக்காவல் கோவில் நிலங்கள் பத்திரப்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், இதையடுத்து, திருவானைக்காவல் கோவில் அடிமனை உரிமை கோரும் போராட்டக்குழுவினர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், அந்த சங்கத்தின் மூத்த நிர்வாகி பத்மநாபன் பேசுகையில், திருவானைக்காவல் கோவில் அடிமனை பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்.
இது தொடர்பாக, தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்துவிட்டோம். மனு கொடுத்துவிட்டோம். போராட்டம் நடத்திவிட்டோம். ஆனால், இதுவரை எங்களுக்குத் தீர்வு கிடைக்கவில்லை.
எனவே, தமிழக அரசுக்கு எங்களது கோரிக்கையைத் தெரிவிக்கும் வகையில், திருச்சி மக்களவைத் தொகுதியில் சுமார் 25 வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்றார்.