கர்நாடக மாநிலம் மைசூர் அருகே, ரூ.98.52 கோடி மதிப்பிலான, 1.22 கோடி லிட்டர் பீர்களை கலால் துறை பறிமுதல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதன் காரணமாக, அனைத்து இடங்களிலும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், போலீசார் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் சாமராஜநகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கலால் துறையினர் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, 98.52 கோடி ரூபாய் மதிப்பிலான 1.22 கோடி லிட்டர் பீர்களை கலால் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த தகவலை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ரூ.3.53 கோடி மதிப்பிலான பணத்தை வருமான வரித்துறை (ஐடி) துறை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு (எஸ்எஸ்டி) கைப்பற்றியுள்ளது.
இதேபோல், பெங்களூரு வடக்கு நாடாளுமன்றத் தொகுதியில் ரூ.2.20 கோடியை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், குல்பர்கா தொகுதியில் ரூ.35 லட்சமும், உடுப்பி – சிக்கமகளூரு தொகுதியில், ரூ.45 லட்சமும் சோதனையின் போது, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கர்நாடகாவில் வருகிற 26 மற்றும் மே 7-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.