கடந்த மக்களவைத் தேர்தலில், குறைந்த வாக்குகள் பதிவான மாவட்டங்களின் உயர் அதிகாரிகளுக்கான கூட்டத்தை தேர்தல் ஆணையம் நடத்தியது.
2024 மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில், குறைந்த அளவு வாக்குகள் பதிவான தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளுக்கான கூட்டத்தை, டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்தில் நடந்தது.
பீகார், உத்தரப்பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா, உத்தராகண்ட், தெலங்கானா, குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட் ஆகிய 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 2019 மக்களவைத் தேர்தலின் போது தேசிய சராசரியான 67.40 சதவீதத்தை விட குறைவாக வாக்குகள் பதிவானது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் ஆணையர்கள் கியானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் போது வாக்காளர்களுக்கான கையேடு ஒன்று வெளியிடப்பட்டது.
இந்த மாநாட்டில் உரையாற்றிய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், மொத்தம் 266 நாடாளுமன்றத் தொகுதிகளில், கடந்த தேர்தலின் போது குறைந்த அளவு வாக்குகள் பதிவானது கண்டறியப்பட்டுள்ளது.
இத்தகைய தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவுறுத்தினார்.