2024-25 மதிப்பீட்டு ஆண்டுக்கான (2023-24 நிதியாண்டு) வருமான வரிக் கணக்கை (ஐடிஆர்) நிதியாண்டின் தொடக்கம் (ஏப்ரல் 1) முதலே தாக்கல் செய்யலாம் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
வரி செலுத்துவோரால் பயன்படுத்தப்படும் ஐடிஆர்-1, ஐடிஆர்-2 மற்றும் ஐடிஆர்-4 ஆகிய படிவங்கள் வாரியத்தின் இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது.
இதைப் பயன்படுத்தி வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரியைத் தாக்கல் செய்யலாம்.
அதேபோல் ஐடிஆர்-6 படிவம் மூலம் பெரு நிறுவனங்களும் ஏப்ரல் 1 முதலே வரித் தாக்கல் செய்யலாம் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த விதிமுறைகளை பின்பற்றும் வகையில் வாரியத்தால் ஐடிஆர்-1 மற்றும் 4 ஆகிய படிவங்கள் 2023, டிசம்பர் 22-ஆம் தேதியும் ஐடிஆர்-6 படிவம் நிகழாண்டு ஜனவரி 14-ஆம் தேதியும் ஐடிஆர்-2 படிவம் ஜனவரி 31- ஆம் தேதியும் வாரியத்தால் வெளியிடப்பட்டது.
தற்போது வரை 23,000 ஐடிஆர் படிவங்கள் நிரப்பப்பட்டு வருமான வரித் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஐடிஆர்-3, 5 மற்றும் 7 ஆகிய படிவங்களும் விரைவில் வெளியிடப்படும் என வாரியம் தெரிவித்துள்ளது.
அண்மைக் காலங்களில் முதல்முறையாக புதிய நிதியாண்டின் முதல் நாளிலேயே வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் வசதியை வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது. இது வரி செலுத்தும் நடைமுறையை எளிதாக்கும் மத்திய அரசின் மற்றுமொரு நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.