கௌகாத்தியில் உள்ள மசூதி ஒன்றில், அசாம் காவல்துறையின் சிறப்பு அதிரடி படையினர் தீவிர சோதனை நடத்தினர். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர போகிறேன் என்றும், அந்த அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்றும் கூறி ஆன்லைனில் பதிவிட்ட ஐஐடி கௌகாத்தியில் பயின்று வந்த மாணவனை போலீசார் கைது செய்த நிலையில், இது தொடர்பாக மசூதியில் சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தடை செய்யப்பட்ட ISIS தீவிரவாத அமைப்பில், சேர போகிறேன் என்றும், அந்த அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்றும் கூறி, ஐஐடி கௌகாத்தியில் பயின்று வந்த தௌசீப் அலி பரூக் என்பவர் இ-மெயில்களை அனுப்பி இருக்கிறார்.
இதனை அடுத்து, கடந்த மார்ச் மாதம் 23-ஆம் தேதி, அந்த மாணவனை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரின் அறையில் சோதனை செய்ததில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய கருப்பு கொடி ஒன்று இருந்தது. அவர் எழுதிய இஸ்லாம் பற்றிய குறிப்புகளும் கைப்பற்றப்பட்டன.
அந்த மாணவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, அவன் தொடர்புடைய இடங்களிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஐஐடி கௌகாத்திக்கு அருகில் உள்ள மசூதி ஒன்றுக்கு தௌசீப் அலி பரூக் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த மசூதியின் இமாம் குல்சார் ஹுசைனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, மசூதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.