தஞ்சையில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ள திருத்தலமான திருக்கண்டியூர் சிவபெருமானின் அட்டவீரட்டத் தலங்களில் முதலாவதும், முதன்மையானதும் ஆகா விளங்குகிறது.
தமிழகத்தில் சிறப்புப் பெற்ற 274 பாடல் பெற்ற சிவத்தலங்களில் இது காவிரியின் தென்கரையில் 127 திருத்தலங்களில் பன்னிரண்டாவது தலமாக விளங்குகிறது .
சப்தஸ்தானத் தலங்களுள்ளும் ஒன்றாகவும் சிறப்பு பெற்ற திருக்கண்டியூர், சம்பந்தர் அப்பர், சுந்தரர் ஆகிய மூவர் பெருமக்களாலும் பாடப் பெற்ற திருத்தலமாகும் .
பிரமன் சிரத்தைத் (ஐந்தனுள் ஒன்றை) தம் சூலத்தால் கண்டனம் செய்த (கொய்த) காரணத்தால் கண்டனபுரம் – கண்டியூர் எனப் பெயர் பெற்றது. பிரமன் சிரம்கொய்த பின், அவன் வேண்டிட ஐம்முகங்களின் அழகினை சதுர் முகங்களில் (நான்கு முகங்களில்) இறைவன் அருளிச் செய்ய, பிரமன் பெற்றுப் பேறடைந்தான் என்பது வரலாறு.
பிரமனின் சிரம் கொய்வதற்காக இறைவன் கொண்ட வடுகக் கோலம்; பிரமன் சந்நிதிக்குச் செல்லும் வாயிலில் கதவோரமாக சிறிய சிலா ரூபமாகவுள்ளது.
“சதாதப” முனிவருக்காக இறைவனால் வில்வமரம் கயிலையிலிருந்து கொண்டு வரப்பட்டதால் இத்தலத்திற்கு ‘ஆதிவில்வாரண்யம் ‘ என்றும் பெயர்.
சதாதப முனிவர் பிரதோஷத்தில் காளத்தி சென்று தரிசனம் செய்து வந்தார்; ஒருமுறை கண்டியூர் வந்தபோது, காளத்திக்கு, நேரத்தில் செல்ல முடியாமற்போயிற்று. அப்போது இறைவன் அம்முனிவருக்கு காளத்தி தரிசனத்தை இத்தலத்திலேயே காட்டியருளினார் என்பது வரலாறு.
சப்தஸ்தானத் திருவிழாவில் (ஏழூர்திருவிழா) சுவாமி இங்கு வந்து இறங்கி, சற்று இளைப்பாறி செல்லும். சிலாத முனிவருக்கு, சதாதப முனிவர் தமையனாராதலின், இளைப்பாறிச் செல்லும்போது மூத்தமாமனார் என்ற வகையில் கட்டிச் சோறு கட்டித் தரும் ஐதீகமாக அன்று (தயிர்சாதம், புளியோதரை) – கட்டித்தந்து சுவாமியுடன் அனுப்புவது மரபாக இருந்து வருகின்றது.
சூரியன் வழிபட்டதலமாதலின், மாசிமாதம் 13, 14, 15-ஆம் நாள்களில் மாலையில் 5 . 45 மணிமுதல் 6 . 10 மணிவரை சூரிய ஒளி சுவாமிமீது படுகிறது.
ஜாதகத்தில் சூரிய தோஷம், பித்ரு தோஷம் இருப்பவர்கள் திருக்கண்டியூர் வந்து எம்பெருமானை வணங்கிவிட்டு சென்றால் தோஷங்கள் நிவர்த்தியாகும் என்று சான்றோர்கள் தம் அனுபவத்தில் கண்டு சொல்லியிருக்கின்றனர்.
இதுமட்டுமின்றி ஜாதகத்தில் பிரம்ம ஹத்தி தோஷம் இருப்பவர்கள் இத்திருத்தலத்துக்கு வந்து இறைவனையும் பிரம்மாவையும் வணங்கி வந்தால் தோஷம் நீங்கி வாழ்வில் வெற்றி கிட்டும் என்பது உண்மை.
எனவே இத்திருத்தலத்து இறைவனை வணங்கி நாமும் அருள் பெறுவோம் .