மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னையில் வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தொடங்கி உள்ளது.
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில், பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளுக்கும், வரும் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வாக்குப்பதிவு எந்திரம் தயார்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தில் 16 வேட்பாளர்களின் சின்னம் மற்றும் பெயர் மட்டுமே பொருத்த இயலும். ஆனால், சென்னையில் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால், வாக்குப்பதிவு எந்திரம் கூடுதலாக தேவைப்படுகிறது.
அந்த வகையில், மத்திய சென்னைக்கு 2 வாக்குப்பதிவு எந்திரங்களும், வடசென்னை, தென்சென்னை தொகுதிகளுக்கு தலா 3 வாக்குப்பதிவு எந்திரங்களும் தேவைப்படும்.
சென்னை மாவட்டத்தில் 3,726 வாக்குச்சாவடி மையங்கள், 944 அமைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அதற்கு தேவையான 11,843 வாக்குப்பதிவு எந்திரங்களும், 4,469 கட்டுப்பாட்டு கருவிகளும், 4,852 வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை கருவிகளும் (வி.வி.பேட்) சென்னை சிந்தாதிரிப்பேட்டை பாதுகாப்பு மையத்தில் இருந்து, சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளின் பாதுகாப்பு மையத்திற்கு தேவைக்கேற்ப ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் நெருங்கி வருவதால், இந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.