சென்னையில் 611 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியவுள்ள காவல் பணியாளர்கள் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள நுண் பார்வையாளர்கள் ஆகியோரை, வாக்குச்சாவடிகளின் வாரியாக கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி, சென்னை ரிப்பன் மாளிகையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான டாக்டர். ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் , 5 வாக்குச்சாவடிகள் உள்ள மையத்திற்கு ஒரு போலீசாா், 5-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி உள்ள மையத்திற்கு 2 போலீசார் என மொத்தம் 9,277 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அதேபோல, வாக்குச்சாவடி அலுவலர்கள் பணிக்கு 19, 419 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 19,097 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 579 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. தற்போது 32 வாக்குச்சாவடிகள் கூடுதலாக பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 611-ஆக அதிகரித்துள்ளது. இதில், மிகவும் பதற்றமான 23 வாக்குச்சாவடிகள் உள்ளன. 769 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளுக்கு நுண் பார்வையாளர்களாக 963 பேர் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரையில் 11,56,524 பேருக்கு ‘பூத் சிலிப்’ கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 8-ஆம் தேதி மட்டும் 3,08,277 பேருக்கு ‘பூத் சிலிப்’ கொடுக்கப்பட்டுள்ளது. 85 வயதிற்கும் மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 82 பேர் நேற்று முன்தினம் தபால் வாக்களித்துள்ளனர்.
வாக்குச்சாவடி அமைந்துள்ள 944 இடங்களுக்கு ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய 239 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப்பதிவு எந்திரத்தில் எதாவது பிரச்சினை ஏற்பட்டால் மாற்று வாக்கு எந்திரத்தை வைப்பார்கள்” என்று கூறினார்.