காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹானியேவின் மூன்று மகன்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடங்கியது. இந்த போரில் விமானப்படை, கப்பற்படை, தரைப்படை என முப்படைகளையும் ஏவிவிட்டு நடத்தி வரும் தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது. இந்த போரில், சுமார் 33 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஹமாஸ் தீவிரவாதிகளை அடியோடு ஒழிப்பதே இஸ்ரேலின் நோக்கமாக உள்ளது. ஹமாஸ் தீவிரவாதிகளின் கோட்டையாக கருதப்படும், ரபா நகரை கைப்பற்ற இஸ்ரேல் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹானியேவின் மகன்கள் ஹாசேம், ஆமீர் மற்றும் முகமது ஆகிய மூன்று பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை ஹமாஸ் தலைவர் உறுதி செய்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் கூறியதாவது, பாலஸ்தீன தலைவர்களின் குடும்பத்தினரை இஸ்ரேல் ராணுவம் குறிவைத்து தாக்கினாலும் அவர்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள். இந்த படுகொலைகளால் போர் நிறுத்த பேச்சுவார்த்தையின்போது, ஹமாஸ் அமைப்பின் கோரிக்கைகளில் எந்த மாற்றமும் இருக்காது என்று கூறினார்.