இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடங்கியது. இந்த போரில் காஸா நகரமே உருக்குலைந்துள்ளது. ஹமாஸ் தீவிரவாதிகளை அடியோடு ஒழிப்பதே இஸ்ரேலின் நோக்கமாக உள்ளது.
இந்த போரில், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இதேபோல், ஏமனின் ஹவுதி தீவிரவாதிகளும், ஹமஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால், செங்கடல் வழியாக செல்லும், இஸ்ரேல் மற்றும் அதற்கு ஆதரவான நாடுகளின் கப்பல் மீது ஹவுதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேலும் தாக்குதல் நடத்துகிறது.
இதற்கிடையே, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பல ஆண்டுகளாக நிழல் யுத்தம் நடந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 1-ஆம் தேதி சிரியாவின் டமாஸ்கசில் உள்ள ஈரான் துணை தூதரகம் தாக்கப்பட்டது. இதில், ஈரான் ராணுவத்தைச் சேர்ந்த 2 முக்கிய தளபதிகள் உட்பட 7 பேரும், சிரியாவைச் சேர்ந்த 4 பேரும், ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த ஒருவரும் என மொத்தம் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது ஈரான் குற்றம்சாட்டியது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேலை எச்சரித்தது.
ஈரானின் எச்சரிக்கைக்கு இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், ஈரான் தனது பகுதியில் இருந்து இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினால், தக்க பதிலடி கொடுக்கப்படும். மேலும், ஈரான் மீது நாங்கள் நேரடியாக தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளார்.