கத்தியின்றி, ரத்தமின்றி எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, அரசியல்வாதிகளும், வேட்பாளர்களும் கும்பகோணம் அருகே உள்ள ஒரு கோவிலுக்கு ரசியமாகச் சென்று யாகம் வளர்த்து வருகின்றனர். இது குறித்த செய்தி தொகுப்பை காணலாம்.
கோயில் நகரம் என அழைக்கப்படும் கும்பகோணம் அருகில் உள்ளது அய்யாவாடி. இங்கு நான்கு திசைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது பிரத்தியங்கிரா தேவி திருக்கோவில். இந்த கோவிலுக்குச் சென்று மனம் உருகி வணங்கினால், எதிரிகளை அழித்து, இழந்ததை எல்லாம் பெறலாம் என்பது ஐதீகம்.
பஞ்சபாண்டவர்கள் வனவாசம் இருந்தபோது, தங்களுக்கான எதிர்காலத்தை தேடி அலைந்தனர். சொத்துக்களை இழந்தும், ராஜாங்கத்தை இழந்தும், ஏன், சாப்பிடவும், தூங்கவும் கூட வழி இல்லாமல் தவித்து வந்தனர்.
அப்போது, அவர்களுக்கு பொக்கிமாகக் கிடைத்ததுதான் இந்த அய்யாவாடி திருக்கோவில். இங்குள்ள, பிரத்தியங்கரா தேவியை மனம் உருகியோ அல்லது தவம் இருந்தோ அல்லது யாகம் வளர்த்தோ வழிபட்டால், இழந்த ராஜாங்கமும், பதவியும் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
அதன்படியே, பாண்டவர்களும், இந்த கோவிலுக்கு சென்று மனம் உருகி பிரத்தியங்கராதேவிக்கு யாகம் வளர்த்து வழிபட்டுள்ளனர். அதன்பலனாக, பகைவர்களை வென்று, இழந்த செல்வம், கௌரவம், பதவி, புகழ் என அனைத்தும் பெற்றனர் என புராணங்கள் கூறுகின்றன.
இதனால், இந்த ஊருக்கு பஞ்சபாண்டவர்களை நினைவு கூறும் வகையில் ஐவர்பாடி என இருந்தது. ஆனால், காலப்போக்கில் மருவி, அய்யாவாடி என மாறிவிட்டது.
இந்த கோவிலில், செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். குறிப்பாக, அமாவாசை தினங்களில் மிளகாய் யாகம் நடத்தப்படுகிறது.
எரியும் யாக குண்டத்தில், மிளகாய் மூட்டை மூட்டையாகப் போடுகிறார்கள். ஆனால், அதிசயமாக அந்த தீ குண்டத்தில் இருந்து காரமோ, கண் எரிச்சலோ அல்லது நெடியோ வருவதில்லை.
பிரத்தியங்கரா தேவியை வழிபட்டால், மரண பயம், கடன், தீராத நோய், மன வேதனை மற்றும் எதிரிகள் தொல்லை என சகல பிரச்சினைகளும் தீரும் என்பது ஐதீகம்.
எந்த ஒரு சூழ்நிலையும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துவதில் அரசியல்வாதிகளுக்கு நிகர் யாருமில்லை. இதனால், தற்போது மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலர், தங்கள் வெற்றி பெறுகிறோமோ இல்லையோ, எதிரி வேட்பாளர் எந்த காரணம் கொண்டும் வெற்றி பெறக்கூடாது என சகல வழிகளிலும் காய் நகர்த்தி வருகின்றனர்.
அந்த வகையில், யாருக்கும் தெரியாத வகையில், இரவு நேரத்தில், பிரத்தியங்கரா தேவியை வழிபட்டும், மிளகாய் யாகம் வளர்த்தும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அவரது உறவினர்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் வட்டாரம் இந்த கோவிலில் குவிந்து வருகின்றனர்.
இதனாலே, தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது.