நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வனத்துறையை கண்டித்து தேர்தலை புறக்கணிக்க போவதாக பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சேர்வலாறு பகுதி உள்ளது. இந்த பகுதியில் 50க்கும் மேற்பட்ட மின்வாரிய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
ஆண்டாண்டு காலமாக இந்த பகுதி மக்கள் பாபநாசம் சோதனை சாவடி வழியாகத்தான் சென்று வருகின்றனர். ஏற்கனவே அவர்களை சோதனை என்ற பெயரில் வனத்துறையினர் துன்புறுத்துவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று இந்த பகுதி மக்கள் ஒன்று கூடி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் புறக்கணிக்கிறோம் எனக் கூறிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்திற்கு விகேபுரம் காவல் ஆய்வாளர் சுஜித் ஆனந்த் மற்றும் பாபநாசம் வனத்துறையினர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தாங்கள் சென்று வரும் போது வனத்துறையினர் துன்புறுத்தக் கூடாது. எப்போதும் போல் எங்கள் வேலையை செய்ய அனுமதிக்க வேண்டும் என கூறினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
பின்னர் சிறிது நேரம் கழித்து, கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால் நாங்கள் கண்டிப்பாக இந்த தேர்தலை புறக்கணிக்கிறோம் என கூறி மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த மாதம் 6 தேதி சேர்வலாறு மற்றும் காரையார் காணி குடியிருப்பு பகுதி மக்களும், மின் வாரிய பகுதி மக்களும், செல்லும் போது செல்லும் வாகன எண் மற்றும் தங்கள் அடையாள அட்டை பதிவு செய்து செல்ல வேண்டும் என்றும், அப்பகுதி பாதுகாக்க பட்ட வனபகுதி என்பதால் பாதுகாப்பு நலன் கருதி, அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் வனத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் ஏற்கனவே வனத்துறை தெரிவித்ததாக கூறப்படுகிறது.