புதுச்சேரி முதலமைச்சரும், அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனருமான என்.ரங்கசாமி வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி, உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சரும், அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் நிறுவனருமான என்.ரங்கசாமி, லாஸ்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று வாக்களித்தார்.
இருசக்கர வாகனத்தில் வந்து வாக்களித்த முதலமைச்சர் ரங்கசாமியை தொடர்ந்து ஏராளமான பொதுமக்களும், அரசியல் பிரமுகர்களும் வாக்களித்தனர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி,
காலை 8.45 மணிக்கு எனது வாககை பதிவு செய்தேன். புதுச்சேரி மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்து வருவதாக தகவல் கிடைத்தது.
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசும், புதுச்சேரியில் ஆளும் எங்கள் அரசும் செய்துள்ள வளர்ச்சி திட்டங்கள். நலத்திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
அமைச்சர் நமச்சிவாயம் வெற்றி பெறுவது உறுதி. மத்தியில் மீண்டும் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். கடந்த தேர்தலைவிட அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்தார்.