தேர்தலன்று வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏற்பட மொபைல் ஆப்-ல் கிடைத்த தகவலின் அடிப்படையில் கணக்கீடு செய்ததே காரணம் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கமளித்துள்ளார்.
தேர்தலன்று நடைபெற்ற வாக்குப்பதிவு சதவீத குளறுபடி குறித்து சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளரிடம் இன்று விளக்கமளித்தார்.
செய்தியாளரிடம் பேசிய சத்யபிரதா சாகு,
வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அளிக்கும் 17 C ஆவணத்தின் அடிப்படையில்தான், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் இறுதி வாக்குப்பதிவு சதவீதத்தை பதிவேற்றம் செய்வார் எனவும், இதில் வரும் தகவல்தான் இறுதியானது எனவும் தெரிவித்துள்ளார்.
தேர்தலன்று வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏற்பட மொபைல் ஆப்-ல் கிடைத்த தகவலின் அடிப்படையில் கணக்கீடு செய்ததே காரணம் எனவும் கூறினார்.
மேலும் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் கட்டாயமாக மொபைல் ஆப்-ல் அப்டேட் செய்ய வேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனவும், ஒரு சிலர் மட்டுமே அப்டேட் செய்ததன் காரணமாகவே வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏற்பட்டதாகவும் கூறினார்.
தேர்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்திட்டு அளிக்கும் தகவல் காலதாமதமாகும் என்பதன் காரணமாகவே மொபைல் ஆப்-ன் மூலமாக ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்தோம் எனவும் விளக்கமளித்தார்.
அதுமட்டுமல்லாமல் வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடிகளை சரிசெய்ய போதுமாக ஏற்பாடு செய்தும், அதனை வாக்காளர்கள சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என அவர் தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களை இணைக்க வாய்ப்பளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.