கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு இன்றியமையாத பாதுகாப்பு அம்சங்களில் முக்கியமானதாக ஏர் பேக்குகள் திகழ்கின்றன. தற்போது அவற்றிலும் போலிகள் வந்து விட்டன இது பற்றி ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
துரதிர்ஷ்டமாக நடக்கும் விபத்துகளின் தாக்கத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு ஆற்றுகின்றன ஏர் பேக்குகள். மிக மிக எடை குறைவான மெல்லிய துணியால் ஒரு மெத்தை போல வடிவமைக்கப் பட்டிருக்கும் இந்த காற்றுப்பைகள் வாகனங்களின் எல்லாப் பக்கங்களிலும் நமக்கு பாதுகாப்பை தருகின்றன .
விபத்து நடந்து ஒரு வினாடிக்குளாகவே விரைந்து விரிந்து தகுந்த பாதுகாப்பை வழங்குகின்றன கூடவே விபத்துகளின் போது ஏற்படும் மோதலால் உண்டாகும் தீவிர தாக்குதலில் இருந்து நம்மை காப்பாற்றுகிறது. இத்தனை முக்கியம் வாய்ந்த விஷயத்தில் போலிகள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது .
சமீபத்தில் மத்திய டெல்லியில் உள்ள மாதா சுந்தரி சாலையில் விபத்துக்குள்ளான தனது காருக்கு பாதுகாப்பு ஏர்பேக் வாங்க ஒருவர் சென்றுள்ளார். ஒரு லட்சம் ரூபாய் விலை உள்ள ஏர்பேக் வெறும் 27,000 ரூபாய்க்கு கிடைத்தது. ஏர் பேக் வாங்க வந்த நபர் ஒரு காவலர் என்பதால் இந்த போலி ஏர்பேக் விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது
இது தொடர்பாக ரயீஸ், பைசான், ஃபர்கான் ஆகிய 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர் . இவர்களிடம் நடந்த விசாரணையில், மத்திய டெல்லியில் , இந்த போலி ஏர் பேக்குகள் தயாரிக்கப் பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் ஏறத்தாழ 2 கோடி ரூபாய் மதிப்புடைய 921 ஏர்பேக்குகள் மீட்கப்பட்டன.
விபத்துக்குள்ளான ஓட்டுநர்களே இந்த போலி ஏர் பேக்குகளின் முதல் தர வாடிக்கையாளர்கள்.
இந்த வகை போலி ஏர் பேக்குகளுக்கு எந்த உத்திர வாதமும் இல்லை என்பது தெரியாமலேயே பலரும் மலிவான விலை என்பதால் வாங்கி சென்று இருக்கிறார்கள்.
இந்த போலி ஏர் பேக்குகளை மற்ற மாநிலங்களுக்கும் கூரியர் மூலம் அனுப்பி இருக்கிறார்கள்
பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து அனைத்து முக்கிய வாகன உற்பத்தியாளர்களுக்கும் டெல்லி காவல்துறை கடிதம் அனுப்பி உள்ளது.
மலிவாக கிடைக்கிறது . ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று கறுப்பு சந்தையில் விற்பனைக்கு வரும் பொருட்களை வாங்காமல் இருப்பதே நல்லது.
நியூஸ் டெஸ்க், தமிழ் ஜனம்