பாரிஸ் ஒலிம்பிக் தொடர் வாள்வீச்சு விளையாட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீராங்கனை பவானி தேவி, அதிர்ஷ்டவசமாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளார், இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…!
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்காக பதக்கங்கள் குவிப்பதை ஒட்டுமொத்த நாடே, எதிர்பார்த்து, அதனை கொண்டாடி நாம் பார்த்திருக்கிறோம்… அதே போல, ஒலிம்பிக்கில் விளையாட நம் நாட்டுக்கான பிரதிநிதியாக தேர்வாகும் ஒருவரை, ஒட்டுமொத்த நாடே கொண்டாடிய நிகழ்வு இருக்கிறதா?
இந்திய வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி, வரலாற்றிலேயே ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய பெண் என்ற கர்வமான பெருமைக்கு சொந்தமானவர். கடந்த 2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு பவானி தேவி தேர்வானது முதல், அவரது பெயர் இந்திய மண்ணில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
பவானி தேவியை கொண்டாட காரணம், எத்தனையோ முறை வாள்வீச்சு விளையாட்டில் பெண்கள் இந்தியாவுக்காக களமிறங்க வேண்டும் என நினைத்து பல முயற்சிகள் எடுத்தாலும், அனைத்தும் தோல்வியிலும், நூலிழையிலும் நழுவி விட்டன…
ஆனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட பவானி தேவி, தொடர்ந்து போட்டிகளில் விளையாடி, 2020ல் அதிகாரபூர்வ தரவரிசைப் படி, ஆசிய பிராந்தியத்தில் முதல் இரண்டு இடங்களில் நீடித்தார். அதே சமயம் உலக அளவில் 45 வது இடத்தைப் பிடித்ததன் மூலம், பாவனி தேவி ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்றார்…
முதல் சுற்றில் துனிசியா வீராங்கனை நதியா பென் அசிசியை 15 க்கு 3 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி, ஒலிம்பிக் தொடரிலேயே வாள்வீச்சு போட்டியில் இந்தியாவுக்காக முதல் வெற்றியை பதிவு செய்த பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
எனினும், பிரான்ஸ் வீராங்கனையிடம் தனது ஒலிம்பிக் பதக்க கனவை பறிகொடுத்த பவானி தேவி, தனது X தள பதிவின் மூலம் இந்திய மக்களிடையே மன்னிப்பு கோரினார்.
2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டாலும், இந்த முறை விட்டுவிடக்கூடாது என பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்தார் பவானி..
ஆசிய வாள்வீச்சு தொடரில் வெண்கலப் பதக்கம் வென்று, இத்தொடரில் பதக்கம் வெல்லும் முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார் பவானி.
அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய பிராந்தியத்திற்கான வாள்வீச்சு தொடரில் பவானி தேவி தலைமையிலான 6 பேர் கொண்ட இந்திய குழு களமிறங்கியது. அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்த பவானி, அரையிறுதி வரை போராடினார்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், இந்த முறையும் ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்று விடுவார் என நினைத்துக் கொண்டிருந்த போது, அரையிறுதி போட்டியில் சீன வீராங்கனை ச்சு விங் கியு இடம் கடுமையாக போராடி 13 க்கு 15 என்ற புள்ளி கணக்கில் தோல்வியுற்றார்.
பவானி தலைமையில் போட்டியிட்ட மீதமுள்ள 5 இந்தியர்களும் தொடர்ந்து தோல்வியை தழுவிய நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கான வாய்ப்பை முற்றிலுமாக இழந்தது இந்தியா. பவானி மீதான இந்தியாவின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் ஏமாற்றதுடன் தகர்ந்தது என்பதை தாண்டி, ஒலிம்பிக்கில் வாள்வீச்சுக்கான முதல் பதக்கத்திற்கு மேலும் 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது அவ்வளவு சுலபமான விளையாட்டு இல்லை. போட்டியாளரின் ஒவ்வொரு நகர்வுக்குமான பயிற்சியும் துல்லியமாக இருந்தால் மட்டுமே வெள்ளியாவது வெல்ல முடியும்.
இந்த தோல்வியால் பவானியின் கனவு தற்காலிகமாக தடைப்பட்டிருந்தாலும், நாளை உலக அரங்கில் இந்திய கொடியை ஏந்தி தங்க மகளாக ஜொலிக்கும் நாள் நீண்ட தூரம் இல்லை என்பதை உணர்ந்து வாழ்த்துவோம்.