திடீரென்று ஏற்படும் அவசர மருத்துவ செலவுக்கு பயன்படும் என்று பொதுமக்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கிறார்கள். ஆனாலும் கூட அந்த ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகள் பல நேரம் பயன்படாமல் போகிறது. பிற காப்பீடுகளுடன் ஒப்பிடும்போது உடல்நலக் காப்பீடு பாலிசி எடுத்தவர்கள் அந்த பணத்தைப் பெறுவதில் அதிகம் சிரமப்படுகின்றனர் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு…
கடந்த 3 ஆண்டுகளில் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிதாரர்களிடம் நாடுமுழுவதும் ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ என்ற அமைப்பு சர்வே ஒன்றை நடத்தியது.
அதில் என்னென்ன மாதிரியான இன்சுரன்ஸ் பாலிசிகள் வைத்துள்ளீர்கள்? கடந்த 12 மாதங்களில் இன்சூரன்ஸ் பாலிசியை எடுத்தீர்களா? அல்லது எடுத்த பாலிசியை புதுப்பித்தீர்களா ? பொது இன்சூரன்ஸ் ,ஹெல்த் இன்சூரன்ஸ் ஆகியவற்றில் எந்த இன்சூரன்ஸ் பாலிசி பணத்தை திரும்ப பெறும் நேரத்தில், உங்களுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்துகிறது? இப்படியான கேள்விகளுடன் எடுக்கப்பட்ட இந்த சர்வே முடிவுகளை லோக்கல் சர்க்கிள்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.
அதில் ஹெல்த் இன்சூரன்ஸ் பணத்தை திரும்ப பெறுவதில் சிரமம் இருப்பதாக பத்தில் நான்கு பேர் தெரிவித்துள்ளனர். பாலிசி தொகையைத் தருவதில் அந்தந்த நிறுவனங்கள் பல வழிகளில் தடை ஏற்படுத்துகின்றனர் என்றும் புகார்கள் சொல்லியிருக்கின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளில் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் claim பெற விண்ணப்பித்தவர்களில் 43% பேர், சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் பணத்தைப் பெறவோ அல்லது செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தவோ பல இடையூறுகள் இருந்ததாக கூறியுள்ளனர்.
பல நேரங்களில் நோயாளி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டால், காப்பீட்டு உரிமை தொகை பெற பத்து மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டி இருக்கிறது என்றும், இதனால் மேலும் ஒரு நாள் மருத்துவமனையில் தங்க நேரிடுகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளஜர். ஆனால் அதற்கான இந்த செலவு தாங்கள் எடுத்திருந்த பாலிஸியில் வராது என்று நிராகரிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்த நபர்களில் பலர் , இக்கட்டான சூழலில் மருத்துவமனையில் இருக்கும்போது, இந்த பாலிசிக்குள் இந்த மருத்துவ செலவு வராது என்று இன்சூரன்ஸ் நிறுவனம் சொல்வது திகைக்க வைப்பதாக சொல்லி இருக்கின்றனர்.
பாலிசியில் இடம்பெறும் தொழில்நுட்ப வாசகங்கள் மற்றும் சிக்கலான சொற்களின் அர்த்தங்கள் காரணமாக காப்பீட்டு ஒப்பந்தங்கள் புரியாமல் போகிறது என்று பெரும்பாலானோர் வருத்தப்படுவதாக கூறியுள்ளனர்.
காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசிகளை திடீரென ரத்து செய்வதும், உடல்நலக் காப்பீட்டு கோரிக்கைகளை நிராகரிப்பதும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிதாரர்களின் முக்கிய பிரச்சனை என்பது இந்த ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவக் காப்பீட்டைக் கோரும் செயல்முறையிலும் சிக்கல் இருப்பதாக பலரும் குறிப்பிட்டுள்ள நிலையில் இதற்கு என்ன தான் தீர்வு? எனக் கேட்டால் , 93 சதவீத பேர் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் IRDAI தான் நுகர்வோருக்குஉதவுகிறது என்று பதில் அளித்திருக்கிறார்கள்.
பெறப்பட்ட, நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பாலிசிகள் மற்றும் ரத்துசெய்யப்பட்ட பாலிசிகள் பற்றிய விவரங்களை ஒவ்வொரு மாதமும் காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் இணையதளங்களில் வெளியிடுவதை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் கட்டாயமாக்கி உள்ளது.
நாட்டின் 302 மாவட்டங்களில் இருந்து 39,000க்கும் மேற்பட்ட நுகர்வோர்களிடம் லோக்கல் சர்க்கிள்ஸ் ஆய்வு நடத்தியுள்ளது.
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், பொதுசுகாதார அமைச்சகம். மற்றும் நுகர்வோர்துறை அமைச்சகம் ஆகியவை கூடுதல் கண்காணிப்பை மேற்கொள்ளவேண்டும் என்பது தான் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தவர்களின் வேண்டுகோளாக இருப்பதை இந்த ஆய்வறிக்கை சுட்டி காட்டுகிறது.