கடந்த 2000ம் ஆண்டு மே 7ம் தேதி தான் முதன்முறையாக ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புதின் பதவியேற்றார். அன்றிலிருந்து இன்றுவரை ரஷ்யாவின் அசைக்க முடியாத தலைவராக கோலோச்சுகிறார். யார் இவர் ? சாதாரண உளவாளியாக வாழ்க்கையை தொடங்கிய புதின் இந்த உயரத்தை அடைந்தது எப்படி ? என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.
சோவியத் யூனியன் துண்டு துண்டாக உடைந்த பிறகும் கூட உலகின் மிகப் பெரிய நாடு ரஷ்யா உள்ளது. கடந்த மார்ச் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் பதிவான 77.4 சதவீத வாக்குகளில் 87.8 சதவீத வாக்குகள் பெற்று ரஷ்யாவின் வீழ்த்த முடியாத தலைவராக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் புதின்.
இந்த அபார வெற்றியால், 200 ஆண்டுகளுக்கு பிறகு , நீண்ட காலமாக ரஷ்யாவை ஆண்ட தலைவர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார். புதினுக்கு முன், சோவியத் யூனியனில் முன்னாள் பேரரசி கேத்ரீன் 1762 ஆண்டு முதல் 1796 ஆண்டு வரை 34 ஆண்டுகள் நான்கு மாதங்கள் ஆட்சி செய்தார். புதினின் வெற்றிப் பாதை அவ்வளவு எளிதானது அல்ல.
இப்போது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்று அழைக்கப்படும் அன்றைய சோவியத் யூனியனின் லெனின்கிராடு நகரில் சராசரியான குடும்பத்தில் பிறந்த விளாடிமிர் புதின், 1975ம் ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மாநில பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று பட்டம் பெற்றார். அதே ஆண்டு ரஷ்ய உளவுத் துறையான KGB-ல் பணியில் சேர்ந்தார்.
சோவியத் யூனியனின் கடைசி அதிபரான மிக்கைல் கொர்பச்சோவ் ஆட்சி காலத்தில், 1985-ஆம் ஆண்டு, கேஜிபி-யின் கிழக்கு ஜெர்மனி பிரிவில் பணியமர்த்தப்பட்டார் புதின்.
1989-ஆம் ஆண்டு ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் அரசாங்கம் வீழ்ச்சியடைய தொடங்கியது. ஜெர்மனின் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு இரும்புத் திரை விலகியது. கம்யூனிச சித்தாந்தங்கள் வெற்று அறிக்கைகளாகி தோற்றன. சோவியத் யூனியன் என்ற பெரிய நாடு சிதைந்து பல நாடுகளாகப் பிரிந்தன.
இந்நிலையில் ரஷ்யாவின் தலைமைப் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது. இதையெல்லாம் கூர்ந்து கவனித்து வந்த புதின் 1990ம் ஆண்டு ரஷ்யா திரும்பினார். ரஷ்யாவில் போரிஸ் யெல்ட்சினின் செல்வாக்கு சரிய ஆரம்பித்த நேரத்தில், கேஜிபி பணியில் இருந்து விலகிய புதின் அரசியலில் இறங்கினார்.
1991ம் ஆண்டு, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்துக்கு புதிய மேயராகப் பொறுப்பேற்ற அனடோலி சோப்சாக் என்பவருக்குக் கீழ் துணை மேயரானார். பின்னர், மாஸ்கோவில் அதிபர் போரிஸ் யெல்ட்சினின் நிர்வாக அலுவலகத்தில் புதின் பணியமர்த்தபட்டார்.
அந்த காலக் கட்டத்தில் கேஜிபி-க்கு மாற்றாக ஒரு புதிய பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதற்கு புதின் தலைமை ஏற்றார். 1999-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அதிபர் போரிஸ் யெல்ட்சின், புதினை ரஷ்யாவின் பிரதமராக்கினார்.
2000-ஆம் ஆண்டில் வரவிருந்த அதிபர் தேர்தலுக்கு முந்தைய சீர்திருத்தங்கள் முழுவதையும் புதினே நேரடியாக கவனித்துக் கொண்டார். அப்போது, செசன்னியா மாகாணத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியை ராணுவ நடவடிக்கை மூலம் புதின் அடக்கினார்.
இதன் பிறகு, போரிஸ் யெல்ட்சின், 1999-ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி புதினை ரஷ்யாவின் பொறுப்பு அதிபராக நியமித்தார். 2000ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், வெற்றி பெற்று புதின் முதல்முறையாக ரஷ்ய அதிபரானார்.
ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் எல்ட்சினின் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த பணக்காரர்களை சீர்திருத்தவாதிகளை மட்டுமின்றி கிரெம்லின் மாளிகையையும் தன் அதிரடி நடவடிக்கைகளால் அதிர வைத்தார்.
ஆரம்பத்தில் புதின் மேற்கத்திய நாடுகளுடன் நட்புறவையே பேணினார். 2001-ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்ட உடனேயே முதல் ஆளாக, அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை அழைத்துப் பேசிய தலைவர்களில் ஒருவர் புதின்.
2008-ஆம் ஆண்டு, மூன்றாவது முறையாகத் தொடர்ந்து அதிபராக இருக்க ரஷ்ய அரசியல் சட்டம் அனுமதிக்காததால், அவர் பிரதமரானார். எனினும், மிக அதிகப்படியான அரசியல் அதிகாரத்தைக் கொண்டவராகவே புதின் இருந்தார்.
இந்த காலகட்டத்தில், மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாக இருந்த முன்னாள் சோவியத் நாடுகளின் மீது ராணுவ அதிகாரத்தைப் பயன்படுத்தினார்.
ரஷ்யாவின் பல பகுதிகளில் 2011 முதல் 2013 வரையில் பல போராட்டங்கள் நடைபெற்றன. ரஷ்யாவை ஆக்கிரமிக்க மேற்கத்திய நாடுகள் செய்யும் சதியாக இந்தப் போராட்டங்கள் இருக்கின்றன என்று புதின் கருதினார். உடனே அணுகுமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்த புதின், 2014 ஆம் ஆண்டு கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைத்தார். இதுவரை புதின் பெற்றதிலேயே மிகப் பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது.
புதினின் இந்த வெற்றி, மேற்கத்திய நாடுகளின் தோல்வி என்று உலகம் ஒப்புக்கொண்டது.
தன்னுடைய ஆட்சிக் காலத்தில், ரஷ்யாவின் ஆட்சிப் பகுதி வரம்பை விரிவாக்கம் செய்வதை நியாயப்படுத்தும் இந்த கொள்கைக்கு ரஷ்ய மக்களின் ஆதரவை உருவாக்கினார்.
நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் சேர நினைக்கும் உக்ரைனால் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கூறிய புதின், அந்நாட்டின் மீது 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி போரை தொடங்கினார். இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் போர் நீடித்து வருகிறது.
புதினின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு ரஷ்யா மீதும், நட்பு நாடான பெலாரஸ் மீதும் பொருளாதார தடைகளை விதித்தன. மேலும், உக்ரைனுக்கு மனிதாபிமான மற்றும் ராணுவ உதவிகளை அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் தாராளமாக வழங்கி வருகின்றன.
மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளையும் மீறி 2023 ஆண்டிலிருந்து ரஷ்யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 2024ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு வருவாய் 79.1% அதிகமாக இருந்ததாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் நேட்டோ படைக்கு மாற்றாக சீனா-ஈரான் ஆகிய நாடுகளுடன் இணைத்து புதிய கூட்டமைப்பை புதின் உருவாக்கி உள்ளார் என தெரிய வருகிறது.
தன்னை எதிர்ப்பவர்களே இல்லை என்னும் நிலையை உருவாக்கி 5வது முறையாக ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புதின், மேற்குலக நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார் என்பதே நிதர்சனமான உண்மை.