கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூ டியுபர் சவுக்கு சங்கர் மீது பதிவான வழக்குகள் 5 ஆக அதிகரித்துள்ளது.
காவல் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசியது, கஞ்சா வைத்திருந்து தொடர்பான வழக்கில், யூ டியுபர் சவுக்கு சங்கரை, கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த 4-ம் தேதி தேனியில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
சிறையில் போலீசார் தாக்கியதில், சவுக்கு சங்கரின் வலது கை முறிவு ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்திருந்தார்.
நீதிமன்றம் உத்தரவிட்டத்தின் பேரில், அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில், யூ டியுபர் சவுக்கு சங்கர் மீது ஏற்கனவே 3 வழக்குகள் பதிவான நிலையில், தற்போது அவர் மீது பதிவான வழக்குகள் 5 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் சவுக்கு சங்கரின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள், சிறையை மாற்றக் கோரி சவுக்கு சங்கரின் தாய் அளித்த மனுவை இரண்டு வாரங்களில் பரிசீலித்து சிறைத் துறை போலீசார் தகுந்த உத்தரவை பிறப்பிக்க உத்தரவிட்டனர்.