அழகாக இருந்தால் தான் நடிகர் ஆக முடியும் . 50 வயதுக்கு மேல் தான் இயக்குனர் ஆக முடியும். இலக்கியத் தமிழ் தெரிந்தால் தான் வசனம் எழுத முடியும் என்பன போன்ற மரபுகளை எல்லாம் உடைத்து தமிழ் திரையுலகில் பல சாதனைகளை படைத்தவர் டி.ராஜேந்தர். அவரைப் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு…!
எண்பதுகளில், கண்ணாடி போட்ட ஒருவர். தாடி வைத்த ஒருவர். இந்த இருவரும் பெரும் தசாவதானிகள். இவர்களே தமிழ் சினிமாவை அந்த கால கட்டத்தில் கோலோச்சினார்கள். ஒருவர் பாக்யராஜ் .மற்றொருவர் டி.ராஜேந்தர்.
இதிலும் டி ஆர். கதை,திரைக்கதை,வசனம்,ஒளிப்பதிவு,இசை,பாடல்கள்,இயக்கம் , தயாரிப்பு என , ஒரு சினிமாவுக்கு என்னவெல்லாம் தேவையோ அனைத்தையும் ஒருவராகவே செய்து பெரும் சாதனை படைத்திருக்கிறார்.
தமிழகத்தில் , மயிலாடுதுறையில் சாதாரண குடும்பத்தில் பிறந்த இவரின் இயற்பெயர் தேசிங்கு ராஜேந்தர் . 26 வயதில் டிஆர் என்ற பெயரில் முதன் முதலாக ஒருதலைராகம் படத்திற்கு கதை வசனம் எழுதி இயக்கினார்.
படம் வெளியாகி முதல் இரண்டு நாட்கள் தியேட்டரில் கூட்டம் இல்லை . பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பிக் அப் ஆகி ரசிகர்களின் பேராதரவுடன் ஒரு வருடம் ஓடியது . கல்லூரி காலங்களில் ரயிலில் கல்லூரிக்கு செல்லும் போது பார்த்த விஷயத்தையே , கூடையிலே கருவாடு என்ற பாடலாக திரையில் காட்டினார் . இந்த பாடல் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.
முதல் படத்திலேயே தன் முத்திரையை ஆழமாக பதித்த டி ஆர் ஒட்டுமொத்த தமிழ் இளைஞர்களின் இதயத்தில் இடம் பிடித்து விட்டார். இரண்டாவது படம் வசந்த அழைப்புக்கள் வெற்றி பெறாமல் போனாலும் , மூன்றாவது படமான ‘இரயில் பயணங்களில் ‘ 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
பிறகு தொடர் வெற்றி என்பது டி ஆரின் வசமானது. அடுத்து இன்னொரு பெரும் வெற்றியைக் கொடுத்தார் . அதுவும் காதல் படம். மோகன் பூர்ணிமா நடித்து துரை இயக்கத்தில் 1981 ஆன் ஆண்டு வெளிவந்த கிளிஞ்சல்கள் . இந்தப்படத்துக்கு இசை டி ஆர். அத்தனை பாடல்களும் அன்றைய இளைஞர்களின் காதல் மந்திரமாக ஒலித்தது .
முன்னணி நட்சத்திரங்களான ரஜினி கமல் உட்பட பிற இயக்குனர்களும் டி ஆரின் வெற்றியைப் பார்த்து மிரண்டு போனார்கள்.
தொடர்ந்து , நெஞ்சில் ஒரு ராகம், தங்கைக்கோர் கீதம், உயிருள்ளவரை உஷா,உறவை காத்த கிளி , மைதிலி என்னை காதலி ,ஒரு தாயின் சபதம் , என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம் என எண்பதுகள் முழுவதும் டி ஆருக்கான ஆண்டுதான். 10 ஆண்டுகளில் 8 க்கும் மேற்பட்ட சூப்பர் ஹிட் வெற்றிப்படங்கள்.
குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், உயிருள்ள வரை உஷா மற்றும் தங்கைக்கோர் கீதம் படங்கwf இவரை புகழின் உச்சத்துக்குக் கொண்டு சென்றது .
உயிருள்ள வரை உஷா , தெலுங்கு மொழியில் மொழி மாற்றம் செய்து வெளியானது . சாதாரண வெற்றி இல்லை சாதனை வெற்றி அடைந்தது . கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடி வசூல் சாதனையைப் படைத்தது.
என் வழி தனி வழி என்று தனக்கு என்று ஒரு தனி பாணி அமைத்துக் கொண்ட டி ஆர், துணிச்சலுக்குப் பேர் பெற்றவர்.
இளையராஜா காலத்திலேயே இசையில் புதுமை , வரிகளில் எளிமை ,என மக்களின் மனதை வென்ற டி ஆர், என் தங்கை கல்யாணி படத்தின் மூலம் தாய்மார்கள் ஆதரவையும் பெற்றிருந்தார்.
இவர் பெயரைச் சொன்னாலே , அடுக்குமொழி வசனங்கள் , பிரம்மாண்ட செட்டுகள் என்பது தான் நினைவுக்கு வரும்.
தொண்ணுறுகளில் எங்க வீட்டு வேலன் திரைப்படத்தின் மூலம் நடிகர் சிம்புவை தமிழகத்தின் ஒவ்வொரு சினிமா இரசிகர்களின் இதயத்தில் பதிய வைத்தார்.
முதல் படம் தொடங்கி இன்று வரை சுறுசுறுப்பாக திரையுலகில் இயங்கி கொண்டிருக்கும் டி ஆர் என்றால் துணிச்சல் என்று தான் சொல்லவேண்டும்.
எந்த ஒரு பெரிய பின்புலமும் இல்லாமல் தனது திறமை, உழைப்பு, இதைமட்டுமே நம்பி , இரும்புத்திரை போடப் பட்ட கோட்டை என்று சொல்லப்படும் தமிழ் சினிமாவில் , வெற்றி நாயகனாக திகழ்பவர் தான் டி ஆர் என்ற டி ராஜேந்தர்.
ஒஸ்தி படத்தில் ஒரு பாடலுக்கு வந்து கலக்கிய இவர், தமிழ் சினிமா என்னும் பெருங்காட்டில் , தனித்து ஜெயித்த சாதனையை இனி யாரும் செய்யமுடியாதுதான்.