திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஜெயக்குமாரின் மா்ம மரணம் தொடா்பாக, அவரது வீட்டின் முன்பு உள்ள கிணற்றின் நீரை வெளியேற்றி தடயங்களை திரட்டும் முயற்சியில் தனிப்படை போலீஸாா் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமாா் கடந்த 2-ம் தேதி வீட்டிலிருந்து மாயமானார். கடந்த 4-ம் தேதி அவரது தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக அவரது உடல் மீட்கப்பட்டது.
ஜெயக்குமாரின் மர்ம மரணம் குறித்து விசாரிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவரின் சடலம் கிடந்த இடத்தில் இருந்து அரை கிலோ மீட்டா் தொலைவில், பெட்ரோல் வாங்கிய 2 லிட்டா் பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, .
இது குறித்து அந்தப் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், ஜெயக்குமாரின் செல்போன் அவரது வீட்டின் முன் உள்ள கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் போலீஸார், ராட்சத மோட்டாா் மூலம் கிணற்றில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவனிடமும், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.