டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு அறிவிக்கப்பட்ட பத்மபூஷன் விருதை அவரது மனைவி பிரேமலதா பெற்றுக்கொண்டார்.
2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 132 பேருக்கு அறிவிக்கப்பட்டது. இதன்படி முதற்கட்ட பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த மாதம் 22ஆம் தேதி நடைபெற்றது.
அப்போது, 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
இதேபோல், இந்தியாவின் முதல் பெண் யானை பாகன் கோவையை சேர்ந்த பெள்ளிக்கு பத்மஸ்ரீ விருதினை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
இந்நிலையில், விடுபட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்கப்பட்டன. மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதை அவரது மனைவியும், தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா பெற்றுக்கொண்டார்.
மேலும் நடிகை வைஜெயந்திமாலா, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்டோருக்கும் பத்ம விபூஷன் விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்.
இதேபோல், கோவை பள்ளிபாளையத்தை சேர்ந்த பாரம்பரிய வள்ளி கும்மி கலைஞர் பத்ரப்பன், சென்னையை சேர்ந்த ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா, உள்ளிட்டோருக்கும் பத்மஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.