1950ம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் இந்து மக்கள் தொகை கிட்டத்தட்ட 8 சதவீதம் அதாவது 7.82 சதவீதம் குறைந்ததுள்ளதாகவும், அதே நேரம் இஸ்லாமியர் மக்கள் தொகை 43.15 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் (EAC-PM) பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு (EAC-PM) என்பது இந்திய அரசாங்கத்திற்கு, குறிப்பாக பிரதமருக்கு பொருளாதார மற்றும் அது தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக உருவாக்கப் பட்ட அரசியல் அமைப்பு சாராத ஒரு சுதந்திரமான தன்னாட்சி அமைப்பாகும்.
இந்த ஆலோசனைக் குழுவின் சார்பாக, ஷமிகா ரவி, ஆபிரகாம் ஜோஸ் மற்றும் அபூர்வ் குமார் மிஸ்ரா ஆகியோர் இணைந்து 1950 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான 65 ஆண்டுகளில் மத சிறுபான்மையினரின் பங்கு குறித்த ஒரு பகுப்பாய்வினை மேற்கொண்டனர்.
” சிறுபான்மை” அல்லது “மத சிறுபான்மை” என்ற சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறை ஏதும் இல்லாததால், ஒரு நாட்டின் மக்கள்தொகையில் பெரும்பான்மை சமூகத்தின் எண்ணிக்கை அடிப்படையில் இந்த ஆய்வை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
இது 1950ம் ஆண்டில் ஒரு நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 50 சதவீதத்துக்கும் அதிகமான மக்களை உள்ளடக்கிய ஒரு மதம் எதுவோ அதுவே ஒரு பெரும்பான்மை சமூகமாக வரைறை செய்து கொண்டு ஆய்வை செய்துள்ளனர்.
உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடிப்படையில், 167 நாடுகளில் பெரும்பான்மையாக வாழ்ந்துவரும் மதப் பிரிவினர் எந்த அளவுக்குப் பாதிப்புள்ளாகிறார்கள் என்பதைக் கண்டறிவதே இந்த ஆய்வின் நோக்கமாக இருந்தது. பல அதிர்ச்சித் தகவல்களைக் கொண்டுள்ள இந்த ஆய்வறிக்கை கடந்த புதன் கிழமை வெளியிடப்பட்டது.
1950ம் ஆண்டில், இந்தியாவில் 84 சதவீதமாக இருந்த இந்துக்களின்எண்ணிக்கை 2015 ஆம் ஆண்டு கணக்குப் படி, 78 சதவீதமாக குறைந்துள்ளதாக, இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் , அதே காலகட்டத்தில், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் மற்றும் சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்திய மக்கள்தொகையில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை கடந்த 65 ஆண்டுகளில் 9.84 சதவீதத்தில் இருந்து 14.09 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 43.15 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல் 1950ம் ஆண்டில் 2.24 ஆக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2015ம் ஆண்டில் 2.36 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள நிலையில், இது 5.38 சதவீதம் உயர்வு என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இதே காலக் கட்டத்தில் சீக்கியர்களின் எண்ணிக்கை 6.58 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், மற்றும் பௌத்தர்களின் எண்ணிக்கையும் சிறிதளவு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ள இந்த அறிக்கையில் இந்தியாவில் சமணர்கள் மற்றும் பார்சிகளின் எண்ணிக்கைகள் குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்படி, 123 நாடுகளில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் , 44 நாடுகளில் பெரும்பான்மை மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்தியத் துணைக்கண்டத்தில், மாலத்தீவுகளைத் தவிர இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் அனைத்து நாடுகளிலும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை பெருமளவில் கூடியுள்ளதாக தெரிவிக்கும் இந்த ஆய்வறிக்கை, குறிப்பாக ,பங்களாதேஷில், இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 18 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், இந்திய துணைக் கண்டத்தில் மிகப்பெரிய மாற்றம் என்றும் தெரிவிக்கிறது
சிறுபான்மை மக்கள்தொகை அதிகரித்துவரும் சூழலில், சிறுபான்மையினரைப் பாதுகாப்பதில் இந்தியாவின் சாதனையைப் பாராட்டிய , பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு , அரசின் நடவடிக்கைகளால் நாட்டின் பன்முகத் தன்மை பேணி வளர்க்கப் படுவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில், சிறுபான்மையினர் குறிப்பாக இஸ்லாமியர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதாக தெரிவிக்கும் இந்த ஆய்வறிக்கை உண்மையில் இந்தியாவில் இஸ்லாமியர்கள் செழிப்படைந்து வருகிறார்கள் என்பதை தரவுகளின் அடிப்படையில் சுட்டிக் காட்டுகிறது.
உலகில் இரண்டே இரண்டு நாடுகளில் தான் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நிலையில், அங்கு இந்துக்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது என்று ஆய்வறிக்கை எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் , பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா, “காங்கிரஸ் கால ஆட்சி நாட்டுக்கு செய்தது இதுதான். காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் விட்டுவிட்டால், இந்துக்களுக்கு நாடு இருக்காது” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.