பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்படட்ட யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கஞ்சா கடத்தல் மற்றும் காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கோவை சைபர் கிரைம் போலீஸாரால் கடந்த 4-ம் தேதி யூ டியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு மற்றும் தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தை சோதனை செய்த போலீசார், 2 லட்சம் ரூபாய் பணம், லேப்டாப் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.
சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய நெறியாளர் பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சவுக்கு சங்கர் மீது இதுவரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. கோவை மத்திய சிறை காவல் அதிகாரிகளிடம் குண்டர் சட்டம் தொடர்பான ஆவணங்களை சென்னை காவல்துறையினர் வழங்கினர்.