கஞ்சா வழக்கு குற்றவாளிகள் தப்புவதற்கு உறுதுணையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், திருவல்லிக்கேணியில் கடந்த 2013, 2019ஆம் ஆண்டுகளில் கஞ்சா கடத்தியதாக பாசல் என்பவர் கைது செய்யப்பட்டு போதிய ஆதாரங்கள் இல்லாததால் போதைப்பொருட்கள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட போதிலும், அவரது விடுதலைக்கு காரணமாக இருந்த காவல்துறையின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றும் கூறியுள்ளார்.
பாசல் கைது செய்யப்பட்ட இருமுறையும் அவரிடமிருந்து கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதன் மாதிரிகள் கூட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்றும், கஞ்சா வழக்குகளில் 6 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதியும் மீறப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
கஞ்சா வழக்குகளில் தப்பிக்க வைக்கப்படும் குற்றவாளிகள்: துணை போகும் காவல்துறை
அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் கஞ்சா கடத்தியதாக 2013, 2019 ஆகிய ஆண்டுகளில் கையும், களவுமாக பிடிக்கப்பட்ட பாசல் என்பவர் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி…
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) May 13, 2024
தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதற்கு காரணம், கஞ்சா வணிகர்களுடன் காவல்துறையினர் வைத்திருக்கும் கூட்டணி தான் என்றும், காவல்துறையினர் நேர்மையாகவும், துணிச்சலாகவும் செயல்படாத வரை கஞ்சா வணிகத்தைத் தடுக்க முடியாது என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
எனவே, கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி தப்புவதற்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கஞ்சா வழக்கு விசாரணைகளை கண்காணிக்க மாவட்ட கண்காணிப்பாளர் நிலையிலான சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.