யூடியூபர் சவுக்கு சங்கர் மீது திருச்சியில் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் போலீசாரை அவதூறு பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் இருந்து திருச்சி நீதிமன்றத்தில் கடந்த 15-ம் தேதி அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, பாதுகாப்பு பணிக்குச் சென்ற திருவெறும்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமியை சவுக்கு சங்கர் தரக்குறைவாக பேசியதாக, திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.
அதன் பேரில் சவுக்கு சங்கர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து சவுக்கு சங்கர் மீது மொத்தம் 9 வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.