சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகரித்திருக்கும் இன்றைய கால கட்டத்தில் விளம்பரங்களின் தாக்கமும் அதிகரித்துள்ளது. ஆனால், அவற்றில் பெரும்பாலான விளம்பரங்கள் தவறான தகவல்களை மக்களுக்கு அளித்திருப்பதாக இந்திய விளம்பர தர நிர்ணய நிறுவனம் தெரிவித்துள்ளது.
மக்கள் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை விளம்பரம் பார்த்து வாங்குவது கிடையாது. ஆனால்,விளம்பரங்களைப் பார்த்து தான் மக்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பொருட்களை வாங்க தூண்டப்படுகிறார்கள்.
ஒரு பொருளை சீக்கிரமாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் விளம்பரம்-ஒரு உந்துசக்தி! இதில் ஆச்சரியம் என்னவென்றால், தரம் சுமாராக இருந்தாலும், அல்லது தரமே இல்லாத பொருளையும் அதிவிரைவாக மக்களிடம் கொண்டு சேர்த்து விடுகிறது விளம்பரம்.
ஆகவே, விளம்பரங்களை ஒழுங்குபடுத்த சில சட்ட விதிகளை உருவாக்கி ,அதை நடைமுறைப்படுத்தவும் இந்திய விளம்பர தர நிர்ணய நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், Fast-Moving Consumer Goods (FMCG) ,Consumer Packaged Goods (CPG) என்று சொல்லப் படும் வேகமாக சந்தையில் நகரும் நுகர்வோர் பொருட்களுக்கு மட்டும் இல்லாமல் , மருத்துவப் பொருட்களுக்கும் அதிகமான விளம்பரங்கள் வருகின்றன.
மக்கள் பார்வைக்கு வரும் இந்த விளம்பரங்களில் பல போலியானவை. இந்திய விளம்பரச் சட்ட விதிகளை மீறியவை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த விதிகளை மீறியும் சமயங்களில் விளம்பரங்கள் வருகின்றன. அப்படி ,கடந்த ஆண்டு மட்டும், 3,200 விளம்பரங்கள் நேரடியாக விளம்பரச் சட்டத்தை மீறியிருக்கின்றன.
இந்தப் பட்டியலில் முதலிடத்தை ஆரோக்கிய விளம்பரங்கள் பிடித்திருக்கிறது , குழந்தை பராமரிப்புக்கான விளம்பரங்களே சட்ட விதிமுறைகளை அதிகம் மீறியிருக்கின்றன.
இந்திய விளமபர சட்டத்தை மீறிய வழக்குகளில் 81 சதவீத வழக்குகள் இந்த இரண்டு பிரிவினர்கள் மீதே பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலும் இந்த வகை விளம்பரங்கள் சமூக ஊடகங்களில் வெளியானவை என்பது குறிப்பிடத் தக்கது.
கிட்டத்தட்ட 282 விளம்பரதாரர்களிடமிருந்து சுமார் 1,131 பந்தய விளம்பரங்கள் சட்டத்தை மீறியிருக்கிறார்கள் என்று கண்டறிந்த விளம்பர கண்காணிப்புக் குழு, குறிப்பாக, பந்தய விளம்பரங்களைப் பதிவேற்றும் நிறுவனங்கள் எவை? என்ற தகவலையும் கண்டுபிடித்துள்ளது.
இந்தியாவில் தடை இருப்பதால் ,பெரும்பாலும் இந்த மாதிரி பந்தய விளம்பரங்களைச் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றும் நிறுவனங்கள் எல்லாம் இந்தியாவுக்கு வெளியே இருந்து செய்யப்படுகின்றன என்று அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
இதற்காக ,இந்த வெளிநாட்டு நிறுவனங்கள்,நுகர்வோரை கவர்வதற்காக, இந்தியபிரபலங்களை தங்கள் விளம்பர யுக்தியாக பயன்படுத்துகிறார்கள் என்று, இக்கண்காணிப்புக் குழுவில் உள்ள அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
56 வகையான நோய்கள் வராமல் தடுப்பதாகவும் அல்லது குணப்படுத்துவதாகவும் விளம்பரம் செய்வது, மற்றும் தனி நபரின் உடல் வலிமை அதிகரிக்க மருந்துகளைப் பரிந்துரைப்பது ஆகிய விளம்பரங்கள் இந்திய மருந்துகள் சட்டத்தின் கீழ் தடுக்கப்படுகின்றன. ஆனாலும் இந்த வகை விளம்பரங்களே அதிகம் வருகின்றன.
நொடியில் நோய் தீரும் என்ற வகையான MAGIC REMEDY வகையான விளம்பரங்களும், ஆயுர்வேத, சித்த மருத்துவ விளம்பரங்களும் இரண்டாவது பெரிய மீறல்ககளாக உள்ளன.
சுமார் 239 விளம்பரதாரர்களிடமிருந்து வெளிவந்த 1,249 விளம்பரங்கள் மருந்துகள் சட்டத்தை மீறுவதாக ஆயுஷ் அமைச்சகத்திடம் புகாரளிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணையத் தளங்களில் வருகின்ற பாலியல் நோய்க்கான விளம்பரங்களில் 91 சதவீத விளம்பரங்கள் போலியானவை மற்றும் பொய்யான தகவல்களைத் தெரிவிப்பவை என்று கூறியிருக்கும், இந்த அறிக்கை பொது மக்களைத் தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் காரணமாக ஹெல்த்கேர் துறை மிகவும் ஆபத்தான சூழலில் சிக்கியிருப்பதாக தெரிவிக்கிறது.
கடந்த நிதியாண்டில் , விளம்பர ஒழுங்குமுறை ஆணையத்துக்கு வந்த 10,093 புகார்களை ஆய்வு செய்ததில் , 81 சதவீத விளம்பரங்கள் நுகர்வோருக்குத் தவறான வழியைக் காட்டி இருக்கிறது. கிட்டத்தட்ட 34 சதவீத விளம்பரங்கள், நுகர்வோரின் ஆரோக்கியத்துக்கு பக்கவிளைவுகள் ஏற்படுத்தும் விளம்பரங்களாக வந்துள்ளன .
குழந்தை பராமரிப்புக்கான ஆரோக்கிய விளம்பரங்களில் 81 சதவீதம் விதிமுறைகளை மீறியுள்ளன என்று செய்தி எல்லோருக்கும் அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது.
இன்றைய டிஜிட்டல் உலகில் எங்கும் நிறைந்துள்ள விளம்பரங்களால் சிக்கல்களே நிறைய ஏற்படுகின்றன எனில் என்னதான் செய்வது?
போலி விளம்பரங்கள் வராமல் இருக்க வேண்டுமானால், தீவிரமான சட்ட நடவடிக்கைககள் அவசியம் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.