பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் நாடுகள் அறிவித்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று நாடுகளில் உள்ள தங்கள் நாட்டின் தூதர்களை இஸ்ரேல் திரும்ப அழைத்துள்ளது. இந்த தனிநாடு அங்கீகாரம் பாலஸ்தீனப் பிரச்சனையில் எந்த மாதிரியான திருப்பத்தை ஏற்படுத்தும்? என்பது பற்றி பார்க்கலாம்.
ஹமாஸ்-இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டு வர பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிப்பதே ஒரே தீர்வாக அமையும் என பல்வேறு ஐரோப்பிய நாடுகள் கூறி வருகின்றன.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இல்லாத நார்வே அரசு, வரும் 28-ந்தேதி பாலஸ்தீனத்தை தனி நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்திருக்கிறது.
ஏன் இந்த திடீர் முடிவு என்ற கேள்விக்கு, பாலஸ்தீனத்தை அங்கீகரிக்காத வரை, மேற்கு ஆசியாவில் அமைதி வராது என்றும், எனவே, இந்த முடிவு எடுக்கப் பட்டதாகவும், நார்வே பிரதமர் ஜோன்ஸ் கார்ஸ்டோர் விளக்கம் கொடுத்துள்ளார்.
மேலும் ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகளான ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து நாடுகளும் பாலஸ்தீனத்தைத் தனி நாடுகளாக அங்கீகரித்துள்ளன.
அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க பிறநாடுகளுடன் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றும், தங்களைப் பின்பற்றி மேலும் பல நாடுகளும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரிக்கும் முடிவை, நாடாளுமன்றத்தில் அறிவித்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்ஷே, இது எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என்றும், முக்கியமாக இஸ்ரேல் மக்களுக்கு எதிரானதல்ல என்று கூறியிருந்தாலும் இஸ்ரேல் இதை நம்ப மறுக்கிறது.
எனவே தான் உடனடியாக, இந்த 3 நாடுகளில் உள்ள தங்கள் நாட்டின் தூதர்களைத் திரும்ப அழைத்துள்ளது இஸ்ரேல்.
இந்த 3 நாடுகளின் முடிவை, ஹமாஸ் பிரிவினரும் மற்றும் மேற்கு கரை பகுதியில் உள்ள பாலஸ்தீன அதிகாரிகளும் வரவேற்றுள்ளனர்.
ஏற்கெனவே கடந்த மே 10ம் தேதி, ஐ.நா சபை கூட்டத்தில், 193 உறுப்பினர்களில் 143 பேர் பாலஸ்தீனம் ஐ. நா.,வில் உறுப்பினராகும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இன்னும் சொல்லப் போனால் , 1988 ஆம் ஆண்டே ஐரோப்பிய நாடுகளான ஹங்கேரி, போலந்து, ருமேனியா, செக் குடியரசு, ஸ்லோவாக்கியா மற்றும் பல்கேரியா, பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளனர். அடுத்து 2014 ஆம் ஆண்டு ஸ்வீடன் பாலஸ்தீனத்தை அங்கீகரித்தது. தொடர்ந்து சைப்ரஸ் மற்றும் மால்டா ஆகிய நாடுகளும் அங்கீகரித்தன. இப்போது நார்வே ,அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் அங்கீகரித்துள்ளன.
1947ஆம் ஆண்டு, பாலஸ்தீனிய அரசுடன் இணைந்து யூத அரசை உருவாக்கும் ஐநா சபையின் பிரிவினைத் திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், பாலஸ்தீனியர்கள் அதிகம் வாழும் நிலத்தில் மூன்றில் இரண்டு பங்கு நிலத்தை யூதர்களுக்கு வழங்க அந்த திட்டம் வழிவகுக்கிறது என்று காரணம் காட்டி,பாலஸ்தீனியர்கள் அதை நிராகரித்து விட்டார்கள்.
பிரச்சனைக்குரிய பாலஸ்தீனத்தில், கிழக்கு ஜெருசலேம் பகுதி மற்றும் மேற்கு கரை பகுதியை ஜோர்டான் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, காசா பகுதியை எகிப்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
1967 ஆம் நடந்த போரில், இந்த 3 பகுதிகளும் இஸ்ரேல் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கிழக்கு ஜெருசலேத்தை தங்கள் தலைநகரின் ஒரு பகுதியாக இஸ்ரேல் அறிவித்தது. கூடவே, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட யூதர்களை மேற்கு கரையில் குடியமர்த்தி அப்பகுதியை அறிவிக்கப்படாத இராணுவ ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தது. காசா பகுதியிலும் இஸ்ரேல் தன் ஆதிக்கத்தை செலுத்தி வந்தது.
கடந்த 2009 ஆம் ஆண்டுக்குப் பின் இருதரப்பினருக்கும் இடையே ஆக்கப் பூர்வமான பேச்சு வார்த்தை நடக்கவே இல்லை.
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தரப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழிக்க இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது இஸ்ரேல்.
ஈரான் லெபனான் நேரடியாகவே ஹமாசுக்கு ஆதரவாக காலத்தில் இறங்க, மேரு ஆசியாவில் போர் சூழல் ஏற்பட்டது.
இஸ்ரேல்- ஹமாஸ் போர் தவிர்க்கப்படவேண்டும் என்று உலக நாடுகள் சொன்னாலும், பாலஸ்தீனிய அரசை எப்போது அங்கீகரிக்க வேண்டும் என்பதில் தான் எல்லா நாடுகளும் ஒரு அரசியல் செய்கின்றன.
உள்நாட்டில் பிரச்சனை அல்லது அழுத்தம் கூடும் போது, தங்களுக்குத் தேவையான நேரத்தில்,பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது என்பதை ஒரு ராஜ தந்திரமாகவே பல நாடுகள் கொண்டுள்ளன.
இந்த பின்னணியில் , அயர்லாந்து. நார்வே, ஸ்பெயின் ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்திருப்பது நல்ல தொடக்கமே. இந்த நாடுகளைத் தொடர்ந்து , பிற ஐரோப்பிய யூனியன் நாடுகளும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கலாம்.
எத்தனை நாடுகள் ஒத்துக் கொண்டாலும் , பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஒப்புக் கொள்ளப் போவதில்லை. தங்கள் எல்லைகளை விட்டுக்கொடுக்காமல், யூதர்களும் பாலஸ்தீனியர்களும் தங்கள் சொந்த மாநிலங்களை அப்படி அப்படியே உரிமை கொள்ளும் ‘இரு நாடு தீர்வு’ என்பதே எப்போதும் முன் வைக்கப்படுகிறது. அதனாலேயே பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வராமல் இழுத்துக் கொண்டே போகிறது.
எல்லைகள் என்னவாக இருக்க வேண்டும்? தலைநகரம் எங்கு இருக்க வேண்டும்? இரு தரப்பினரும் முதலில் என்ன செய்ய வேண்டும்? இதைப் பற்றி எல்லாம் யோசிக்காமல் வெறுமனே அங்கீகரிப்பதால் மட்டும் இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனைக்கு தீர்வு வந்து விடாது என்பதே உலக அரசியல் பார்வையாளர்களின் கருத்து.