எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார், என்னவெல்லாம் செய்ய மாட்டார் என உத்தரவாதம் அளித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என யூடியூபர் சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் காவலர்களை அவதூறாக பேசியதாகக் கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கர், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்து தனது மகனை விடுவிக்கக்கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் சென்னை காவல் ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், முதல்வரை ஒருமையில் அழைத்ததை ஏற்க முடியாது என தெரிவித்தனர்.
மேலும், எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார், என்னவெல்லாம் செய்ய மாட்டார் என உத்தரவாதம் அளித்து பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய சவுக்கு சங்கருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.