கடந்த பல ஆண்டுகளாகவே பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதற்கு என்ன காரணம் ? பாகிஸ்தான் மக்கள் வாழ்வாதாரம் இழந்து பரிதவிப்பதன் பின்னணி என்ன? பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்…!
பொருளாதார வீழ்ச்சி, ஸ்திரத் தன்மை இல்லாத அரசு, சட்டம் ஒழுங்கு சீர்க்கேடு, பணவீக்கம், அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாதது உள்ளிட்ட பல காரணங்களால் பாகிஸ்தான் தள்ளாடுகிறது. கடுமையான விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு ,வேலைவாய்ப்பின்மை, அளவுக்கு அதிகமான தொழில்வரிகள் போன்றவற்றால் பாகிஸ்தான் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.
கொரோனா காலத்துக்குப் பின் இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. மக்கள் வாழ்வாதாரம் இழந்தனர்.
அதே நிலைமைதான் தற்போது பாகிஸ்தானுக்கும் ஏற்பட்டிருக்கிறது. இந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்க பாகிஸ்தான் உலக நாடுகளின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறது.
அதிலும் தனது எதிரி நாடாகக் கருதிய இந்தியாவிடமே உதவியைப் பெற பல வழிகளில் முயற்சி செய்தது. இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த மீண்டும் மீண்டும் முயற்சி எடுத்தது. ஆனால் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை முடிவுக்குகொண்டுவந்த பிறகே பேச்சுவார்த்தை என்ற தன் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக நிற்கிறது.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் பாகிஸ்தான் பரிதவித்துக் கொண்டிருக்கிறது. இப்படியாக பாகிஸ்தானின் நிதி நிலை மோசமாக இருப்பது மட்டுமில்லை. அப்படிப்பட்ட நிலையில் இருந்து எப்படி வெளியே வருவது என்ற திட்டம் கூட பாகிஸ்தானிடம் இல்லை என்பதுதான் ஹைலைட்.
பொருளாதார பிரச்சினையின் விளைவாக மக்கள் வறுமையில் தள்ளப் பட்டிருக்கிறார்கள். நாட்டில் பாதுகாப்பற்ற சூழல் உருவாகி உள்ளது.
இதற்கிடையே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நீண்ட நாட்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. அப்பகுதி மக்கள்,பாகிஸ்தான் அரசின் மீது நம்பிக்கை இழந்த நிலையில் இந்தியாவுடன் சேர்ந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டதாகவே தெரிகிறது.
வெளிநாட்டில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் பாகிஸ்தானில் கிடைக்கும் வருமானத்திற்கு மட்டுமே வரி செலுத்தினால் போதும். அவர்கள் தங்கள் சொத்து அறிக்கையை தாக்கல் செய்யவோ அல்லது வெளிநாட்டு சொத்துக்களை அறிவிக்கவோ தேவையில்லை என்ற சட்டம் பாகிஸ்தானில் உண்டு.
எனவே ,பாகிஸ்தானின் முக்கிய அரசியல் வாதிகள், நீதிபதிகள், அரசு உயர்அதிகாரிகள், பெரும் பணக்காரர்கள் என ஏகப்பட்ட பேர் துபாயில் தொழில் முதலீடு மற்றும் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளனர்.
ஒரு வேளை உணவுக்கே வழியின்றி பெரும்பாலான மக்கள் கஷ்டப் படும் நேரத்தில் இந்த செய்தி பாகிஸ்தான் மக்களுக்கு மேலும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
அரசியல் குழப்பம் வேறு பாகிஸ்தானை பிரிவினையை நோக்கி தள்ளிக் கொண்டிருக்க, எல்லா பக்கங்களில் இருந்தும் பூதாகரமான பிரச்னைகள் எழுந்துள்ளன.
சீனாவுடன் நெருக்கமானால், உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்க பயந்து தனக்கு உதவும் என்று எதிர்பார்த்தது பாகிஸ்தான். ஆனால் பாகிஸ்தானின் கணக்கு இங்கே தான் தவறாகிப் போனது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பாகிஸ்தானை கண்டுகொள்ளவும் இல்லை.
பாகிஸ்தானுக்கு உதவவும் ஆர்வம் காட்டவில்லை. சொந்த தாய் நாட்டின் வளங்களை இத்தனை காலம் சுரண்டிய அரசியல்வாதிகளும் உயர் அதிகாரிகளும் இப்போது திவால் நிலைக்கு நாட்டை எடுத்துச் சென்றுள்ளனர் எனபது தான் உண்மையிலும் உண்மை.
ஆனால் இப்படிப்பட்ட நிலைமை பாகிஸ்தானுக்கு ஒன்றும் புதிதல்ல . 1958 ஆம் ஆண்டில்தான் முதல் முதலாக பாகிஸ்தான் International Monetary Fund எனப்படும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 25 ஆயிரம் அமெரிக்க டாலர் கடன் பெற்றது.
இது இன்றைய மதிப்புக்கு 2 லட்சத்து 74 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு சமமாகும். 2008 ஆம் ஆண்டு, கிலானி ஆட்சிக் காலத்தில் தான், அதிகபட்சமாக எப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தொகையாக, 7.6 பில்லியன் அமெரிக்க டாலர் கடனாக பெறப் பட்டது. மொத்தமாக கடந்த 75 ஆண்டுகளில், பாகிஸ்தான் 23 முறை சர்வதேச நிதி ஆணையத்திடம் கடன் வாங்கி இருக்கிறது.
இதற்கு ஒரே அர்த்தம் தான் உண்டு. கடந்த 75 ஆண்டுகளில் பாகிஸ்தான் 23 தடவைகள் திவாலாகி இருக்கிறது.
இனி கடன் தர முடியாது என்று பலமுறை சொன்ன போதும் , சர்வ தேச நிதி ஆணையத்திடம் மீண்டும் 3 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் கேட்டிருக்கிறது பாகிஸ்தான் அரசு. கடந்த வாரம் 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவி செய்ய சர்வ தேச நிதி ஆணையம் முன் வந்திருக்கிறது.
பாகிஸ்தானுக்கு ஏன் மீண்டும் சர்வ தேச நிதி ஆணையம் நிதி அளிக்க முன்வந்துள்ளது? என்ற கேள்வியும் எழுந்துள்ள நிலையில் அதற்கான பதில்தான் வித்தியாசமாக இருக்கிறது.
பாகிஸ்தான் திவாலானால், மக்கள் போராட்டம் ஏற்படும்.
அதனால் அரசியல் குழப்பம் உண்டாகும்.நாடு அடிப்படைவாத தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் போகும். பாகிஸ்தானிடம் இருக்கும் நாட்டின் அணு ஆயுதங்களும் தீவிரவாதிகளின் கைகளுக்குச் செல்லும்.
இவற்றை தடுக்கவே பாகிஸ்தானுக்கு உதவ சர்வ தேச நிதி ஆணையம் முன்வந்திருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எது எப்படியென்றாலும் தள்ளாடும் பாகிஸ்தான் தன்னை தாங்கிப் பிடிக்க யார் வருவார்கள் என்றே காத்துக் கொண்டிருக்கிறது.