” ரஷ்யாவின் சட்டம்” என்று பரவலாக அறியப்படும் வெளிநாட்டு முகவர்கள் சட்ட மசோதாவை, ஜார்ஜியா அரசு நிறைவேற்றியதைக் கண்டித்து, அரசுக்கு எதிராக ஜார்ஜியா மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதென்ன ரஷ்யாவின் சட்டம் ? இந்த சட்டத்தை ஏன் அரசு கொண்டு வந்துள்ளது ? இந்த சட்டத்தால் ஜார்ஜியா மக்களுக்கு என்ன பிரச்சனை ? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு .
2008 ஆம் ஆண்டுக்கு முன்பே, ஐரோப்பிய யூனியனில் சேரவும், நேட்டோ உறுப்பு நாடாக மாறவும் ஜார்ஜியா விரும்பியது. அப்போதே ரஷ்ய படையெடுப்பின் காரணமாக, உள்நாட்டு குழப்பம், பொருளாதார வீழ்ச்சி என ஜார்ஜியா தடுமாறத் தொடங்கியது. இப்போதும், ஜார்ஜியாவின் இருபது சதவீத நிலத்தை ரஷ்ய துருப்புக்கள் தங்கள் கட்டுப்பாட்டில் ஆக்கிரமித்து வைத்துள்ளன.
கொஞ்சம் கொஞ்சமாக மேற்குலக நாடுகளின் சார்பாக மாறிய ஜார்ஜியாவுக்கு, கடந்த டிசம்பர் மாதம் ஐரோப்பிய யூனியனில் அந்தஸ்து கிடைத்தது.
கடந்த பிப்ரவரி மாதம், நாட்டின் அதிபரும்,பிரதம மந்திரியும் ஒரே குரலில் ரஷ்யாவுக்கு எதிராகவும், உக்ரைனுக்கு ஆதரவாகவும் அறிக்கைகளை வெளியிட்டனர்.
ஒரு மாதத்துக்குள்ளேயே ஜார்ஜியா பிரதமர் Irakli Kobakhidze , மேற்கத்திய நாடுகள் ஜார்ஜியாவின் தேசிய நலன்களை காலில் போட்டு மிதித்து அழிக்கிறது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
ஜார்ஜியா, ரஷ்யாவுக்கு ஆதரவான நிலையை எடுக்கிறது என்று தெரிந்ததும், அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ஜார்ஜியாவை எச்சரித்தன.
இந்த சுழலில் தான், வெளிநாட்டு முகவர்கள் சட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி ஜார்ஜியா அரசு நிறைவேற்றி இருக்கிறது. தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி , இந்த சட்டத்தை நிறுத்தப் போவதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்திருந்தார்.
அதிபரின் வீட்டோ பயன்பாட்டுக்கு எதிராக புதிய தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றும் அளவுக்கு ஜார்ஜியா ஆளும் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால், இந்த சட்டம் நடைமுறையில் இருக்கும் என்று தான் சொல்லப்படுகிறது.
அதென்ன ரஷ்யா சட்டம் இது ? இதனால் மக்களுக்கு என்ன பாதிப்பு என்று தானே கேட்கறீர்கள்?
ரஷ்யாவின் அதிபர் புதினுக்குக் கடும் எதிர்ப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, 2012 ஆம் ஆண்டு, ‘ரஷ்ய வெளிநாட்டு முகவர்கள் சட்டம்’ நடைமுறைக்கு வந்தது.
வெளிநாட்டில் இருந்து உதவி பெறுபவர்கள் அல்லது வெளிநாட்டு நிறுவனங்களின் செல்வாக்கின் கீழ் இருப்பவர்கள் தங்களை “வெளிநாட்டு முகவர்கள்” என்று பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், மீறுபவர்கள் மீதும், ரஷ்யாவிலும், ரஷ்யாவுக்கு வெளியிலும் நாட்டுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த ரஷ்ய சட்டம் வலியுறுத்துகிறது.
“வெளிநாட்டு செல்வாக்கின்” கீழ் பணம் பெற்று செயல்படும் எந்த நிறுவனத்தையும், அல்லது எந்த தனி நபரையும் இந்தச் சட்டம் கட்டுப்படுத்தும் என்று, 2022 ஆம் ஆண்டில், சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
கடந்த 12 ஆண்டுகளாக ஜார்ஜியாவில் ஆட்சியில் இருக்கும் ஜார்ஜியன் டிரீம் கட்சியும் இதே சட்டத்தை இப்போது கொண்டு வந்திருக்கிறது.
வெளிநாட்டு நன்கொடையாளர்களிடமிருந்து 20 சதவீதத்துக்கும் அதிகமான நிதியை வெளிநாடுகளில் இருந்து பெரும் நபரோ, நிறுவனமோ , கட்டாயம் அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்றும், அவர்கள் நிதி அமைச்சகத்தால் கண்காணிக்கப்படுவார்கள் என்றும், நிதி மோசடி மற்றும் நாட்டுக்கு எதிராக செய்யப்பட்டாலோ அபராதத்துடன் கூடிய தண்டனை உண்டு என்றும், இந்த புதிய சட்டத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம், நாட்டின் எதிர்காலத்தைக் கொன்றுவிடும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் , ஐரோப்பிய ஒன்றியத்திற்கான முன்னாள் தூதுவருமான சலோமி சமதாஷ்விலி எச்சரித்திருக்கிறார்.
கடந்த புதன்கிழமை, அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், நாட்டில் மக்கள் போராட்டத்துக்கு வழிவகுக்கும் , சர்ச்சைக்குரிய “வெளிநாட்டு முகவர்” சட்டம் நடைமுறைக்கு வருமானால், ஜார்ஜியாவுக்கு விசா கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதிக்கும் என்றதோடு, இரு நாட்டு அரசு உறவுகளும் சுமூகமாக இருக்காது என்றும் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவார, நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்தை முன் வைத்து ஜார்ஜியாவை அமெரிக்கா அச்சுறுத்துவதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
வரும் அக்டோபரில் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் , உள்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த, வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களும், சமூக அமைப்புகளும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சாதி செய்கின்றன என்று ஜார்ஜியா அரசு நினைக்கிறது.
மேலும் மேலும் ,தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஜார்ஜியாவில் இரண்டு முறை புரட்சிகளை நடத்த முயற்சித்தாகவும், “ஓரினச்சேர்க்கையாளர்களின் பிரச்சாரத்தை” ஊக்குவிப்பதாகவும், மற்றும் ஜார்ஜியாவின் பழைமையான தேவாலயம் மீது தாக்குதல் நடத்தியதாகவும் குற்றம் சாட்டிய அந்நாட்டு பிரதமர், எந்த சூழலிலும், நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுக்க முடியாது என்று உறுதிப்படத் தெரிவித்திருக்கிறார்.
ஜார்ஜியா அரசுக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான உறவுகள் கொஞ்ச நாட்களாகவே கடுமையாக மோசமடைந்து வருகின்றன .
இன்னொரு உக்ரைன் ஆகிறதா அல்லது பெலராஸ் ஆகிறதா என்று கேட்டால் , வரும் நாட்களில் தெரியவரும் என்கின்றனர் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.