ஸ்மார்ட் வாட்ச், ப்ளூ டூத், ஹெட் போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு கடும் சரிவை கண்டுள்ளது. ஒருபக்கம் இந்தியாவின் மின்னணு சாதனங்களின் ஏற்றுமதி சமீப காலமாக உயர்ந்து வரும் நிலையில் உள்நாட்டில் விலை சரிவு நுகர்வோருக்கு லாபமாக அமைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும். திடீரென மின்னணு பொருட்களின் விலை சரிவு ஏன் ஏற்பட்டது ? என்ன காரணம் ? என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம் .
நுகர்வோர் கலாசாரம் இந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் சூழலில் இன்றைக்கு உப்பு முதல் லேப்டாப் வரை அனைத்தையும் ஆன் லைன் ஷாப்பிங் மூலமாகவே எல்லோரும் வாங்கப் பழகி விட்டார்கள். சமயங்களில் தேவையே இல்லை என்றாலும் , எதையாவது வாங்குவோம் என ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் அளவுக்கு போய் விட்டார்கள் என்று கூட சொல்லலாம்.
கடந்த பிப்ரவரியில் அகமதாபாத் ஐஐஎம் நடத்திய ஒரு ஆய்வில், குறிப்பாக ஆன்லைன் ஷாப்பிங் அதிகம் செய்வது ஆண்கள் தான் என்று தெரியவந்தது. 23 சதவீத ஆண்களும் 16 சதவீத பெண்களும் மின்னணு சாதனங்களுக்காக ஆன்லைன் ஷாப்பிங் செய்வதாக அந்த ஆய்வறிக்கை தெரிவித்திருந்தது.
இந்தியாவில் உள்ள பிரபல ஆன் லைன் ஷாப்பிங் நிறுவனங்கள், மாதந்தோறும் தள்ளுபடி விற்பனையை ஒரு கொண்டாட்டமாகவே வைத்துள்ளன.
Super Cooling Days என்றும், big saving days என்றும், Summer Sale என்றும் வெவ்வேறு ஆன் லைன் நிறுவனங்கள் வெவ்வேறு பெயர்களில் தள்ளுபடி விற்பனையை அறிவித்த வண்ணம் உள்ளன.
இது எல்லாவற்றிலும், எலக்ட்ரானிக் பொருட்களான, ஹெட்ஃபோன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், கேமராக்கள், மடிக்கணினிகள், ஹோம் தியேட்டர்கள் போன்ற பல்வேறு மின்னணு பொருட்களின் விலைகள் 70 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்பட்டு ஆன் லைன் சந்தையில் உள்ளன.
சில மாதங்களுக்கு முன்பு வரை அதிக விலைக்கு விற்கப்பட்ட மின்னணு பொருட்களின் விலை தற்போது பாதிக்கு பாதியாக குறைந்து இருக்கிறது.
கடந்த ஆண்டு 2000 ரூபாய்க்கு விற்கப் பட்ட பிராண்டட் ஸ்மார்ட் வாட்ச் வெறும் 999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றும், 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப் பட்ட ப்ளூ டூத் இப்போது 400 ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்யப்படுகிறது.
பெரும் நிறுவனங்களிடையே நடக்கும் விற்பனைப் போட்டிகள் காரணமாக ,ஒன்றுக்கு ஒன்று இலவசம், எந்த பொருளானாலும் 60 சதவீத தள்ளுபடி என நிறுவனங்கள் அதிரடி காட்டி தொடங்கியுள்ளதால் மின்னணு சாதனங்களின் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாக சந்தை பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
வரலாற்றில் , 1909 ஆம் ஆண்டு அமெரிக்காவில், பிரபலமான பாஸ்டன் டிபார்ட்மென்ட் ஸ்டோரான Filene’s இல் தான் முதல் முதலாக discount basement என்ற பெயரில் அறிமுகமானது. அதாவது, கடைக்குப் பொருள் வந்து 2 நாட்களுக்குப் பிறகு அதன் விலை 25 சதவீதம் குறைக்கப்பட்டது , பிறகு 18 நாட்களில் 50 சதவீதம் குறைக்கப் பட்டது, அடுத்த 24 நாட்களில் 75 சதவீதம் குறைக்கப் பட்டு , இறுதியாக, 30 வது நாளுக்குப் பிறகு, அந்தச் சரக்குகள் அறக்கட்டளைக்குக் கட்டணம் ஏதுமின்றி வழங்கப் பட்டது.
இந்த முறை தான், இப்போது வேறு பெயரில் சந்தைப் போட்டி காரணமாக, எல்லா நிறுவனங்களும் நடைமுறைபடுத்துகின்றன. இதனால் , நுகர்வோர் காட்டில் தான் மழை என்று தான் சொல்ல வேண்டும்.