இறுதி கட்ட மக்களவை தேர்தல் வரும் 1 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் கடல் நடுவே இருக்கும் சுவாமி விவேகானந்தர் பாறையில் தொடர்ந்து 3 நாட்கள் தவம் மேற்கொள்கிறார். கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் கடும் தவம் ஏன்? இதன் மூலம் பிரதமர் மோடி சொல்லும் செய்தி என்ன ? என்பது பற்றி பார்க்கலாம்.
பழம்பெரும் ஞான பூமியான பாரதத்தின் தென் கோடி முனை கன்னியாகுமரி. இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் ஆகிய முக்கடலின் சங்கமமான இந்த இடத்தில் தான், பார்வதி தேவி , கன்னிக் குமரியாக சிவபெருமானை எண்ணித் தவம் மேற்கொள்கிறாள்.
பாரதத்தை பாம்பாட்டிகளின் நாடு என எண்ணிக்கொண்டிருந்த மேற்குலக மக்களுக்கு , தனது புகழ்பெற்ற சிகாகோ சொற்பொழிவின் மூலம் பாரதத்தின் பெருமையை உரக்கச் சொன்ன சுவாமி விவேகானந்தர், அதற்கு முன்னதாக இங்கே கன்னியாகுமரியில் தான் தவம் இருந்தார்.
1886ம் ஆண்டு பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் முக்திநிலை அடைந்த பிறகு, தொடர்ந்து ஆறு ஆண்டுகள் பாரத தேசத்தைப் பாத யாத்திரையாகவே வலம் வந்த இளைஞர் நரேந்திரன்
1892ம் ஆண்டு டிசம்பர் 25, 26 மற்றும் 27 ஆகிய மூன்று நாட்கள் குமரிக் கடல் நடுவே உள்ள பாறையில் அமர்ந்து தவம் மேற்கொண்டார்.
நரேந்திரனுக்கு இந்த புண்ணிய பாரதத்தின் பல்லாயிரமாண்டு கால வரலாறு கண் முன் ஒரு திரைப்படம் போல் ஓடியது. தொன்று தொட்டு இந்த பாரதத்தை வழிநடத்திய மகரிஷிகளும் மாமுனிவர்களும் நரேந்திரனுக்கு வழி காட்டினார்கள்.
அப்போது வெள்ளையர்களுக்கு அடிமையாக இருந்த பாரதம் தனது ஆன்மீக ஆற்றலை உணர்ந்தால் மட்டுமே விடுதலை அடையும் என்பதை உணர்ந்ததோடு, பாரத மக்களை விழிப்புற செய்வதே தமது கடமை என்று உணர்ந்தார் நரேந்திரர். எழுமின் விழிமின் என்று இந்தியாவைத் தட்டி எழுப்பிய சுவாமி விவேகானந்தரை போல் பிரதமர் மோடி குமரி கடலில் 3 நாட்கள் கடும் தவம் செய்கிறார்.
உலகின் விஷ்வ குருவாக பாரதத்தை நிலைநிறுத்த உழைத்துக் கொண்டிருக்கும் பிரதமர் மோடி, சப்கா சாத், சப்கா விகாஸ் என்று நாட்டை மூன்றாவது பொருளாதார நாடாக முன்னேற்றுவேன் என்று உறுதி பூண்டிருக்கிறார். அதனால் தான் பிரதமர் மோடி, கன்னியாகுமரியில் கடல் நடுவே தவம் மேற்கொள்கிறார்.
1887ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் வட இந்தியாவுக்கு முதல் முதலாக வருகை புரிந்தார். அதுவும் வாரணாசி நகருக்குத் தான் முதல் முதலாக வந்தார். பிரதமர் நரேந்திர மோடியும் 2014 ஆண்டில் மக்களவைத் தேர்தலில் வாரணாசியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார்.
1890ம் ஆண்டு செப்டம்பர் உத்தரகாண்ட்டில் உள்ள அல்மோராவுக்கு சென்ற சுவாமி விவேகானந்தர் கசர் தேவி குகையில் நீண்ட நேரம் தியானம் செய்தார்.
அதே போல் பிரதமர் நரேந்திர மோடியும் 2019 ஆண்டு இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின் , அல்மோராவுக்குச் சென்று அதே கசர் தேவி குகையில் 17 மணி நேரம் தவம் செய்தார்.
முன்னதாக, 2014ம் ஆண்டும் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின்னர் மகாராஷ்டிராவில் உள்ள இந்து ராஜ்ஜியம் கண்ட மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜியின் புகழ்கூறும் பிரதாப்காட் கோட்டையில் அஞ்சலி செலுத்தினார்.
மேலும் இந்தியாவின் பெருமைக்காக போராடிய சத்ரபதி சிவாஜியின் போராட்டம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக மட்டும் அல்ல என்றும், அடிமைத்தனத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றுவதற்காக என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
கடந்த ஜனவரி 12ம் தேதி சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளில், சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள் ஆற்றலையும் உத்வேகத்தையும் தந்து இளைஞர்களை எப்போதும் ஊக்குவிக்கும் என்று தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2001ம் ஆண்டு அக்டோபரில் குஜராத்தின் முதல்வராக மோடி 5.5 கோடி மக்களுக்குச் சேவை செய்யக் கிடைத்த வாய்ப்பு, பிறகு 2014 ஆண்டு முதல் பிரதமராக இந்தியர்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பாக மாற்றப்பட்டது. 2019ம் ஆண்டிலும் இரண்டாவது முறையாக இந்தியாவை வழிநடத்திய பிரதமர் மோடி, இப்போது மூன்றாவது முறையாக இந்தியாவை வழிநடத்துவார் என்று எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் கன்னியாகுமரியில் 3 நாட்கள் நாட்டு மக்களுக்காக பிரதமர் மோடி தவம் செய்கிறார். உலகமே இந்தியாவை உற்று பார்க்கிறது ஆச்சரியமாக!