பேச்சிப்பாறை அணையில் இருந்து அதிக அளவு உபரி நீர் திறக்கப்பட்டதால், கோதையாறு மற்றும் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு பருவ மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிபாறை அணை 45 புள்ளி 59 அடியை தாண்டியதால், அணையில் இருந்து 2 ஆயிரத்து 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.
இதனால், கோதையாறு மற்றும் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கோதையாறு மற்றும் தாமிரபரணி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.