பிரதமராக பதவியேற்றுக் கொண்ட முதல் நாளையே விவசாயிகளுக்கு மோடி அரசு அர்ப்பணித்ததாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பிரதமரின் கிசான் சம்மான் நிதியுதவி திட்டத்தின்கீழ் 9 கோடியே 30 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதற்கான கோப்புகளில் பிரதமர் மோடி கையொப்பமிட்டு, தனது அலுவல்பூர்வ பணியைத் தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முன்னுரிமைகளில் விவசாயிகள் நலன் முக்கிய பங்கு வகிப்பதாகவும், இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் மத்திய அமைச்சர் அமித் ஷா எக்ஸ் வலைதளத்தில் கூறியுள்ளார்.
இதேபோல மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள பதிவில், விவசாயிகளின் நலனுக்காக தங்களது அரசு கடமைப்பட்டுள்ளதாகவும், அவர்களது நலனுக்கான கோப்புகளில் கையொப்பமிட்டது இதற்கு சிறந்த உதாரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.