ஆந்திரப் பிரதேச பாஜக தலைவரும், ராஜமுந்திரி தொகுதி எம்.பி.யுமான புரந்தேஸ்வரி, மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், ஆந்திர மாநில பாஜக தலைவராகவும் உள்ள புரந்தேஸ்வரி, இந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஆந்திராவில் தெலுங்கு தேசம், ஜனசேனாவுடன் கூட்டணி அமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தார்.
இம்முறை ராஜமுந்திரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புரந்தேஸ்வரி, இதற்கு முன்னதாக கடந்த 2004-ம் ஆண்டு பாபட்லாவிலிருந்தும், கடந்த 2009-ம் ஆண்டு விசாகப்பட்டினத்திலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தத் தேர்தலில், ஆந்திராவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறுவதில் முக்கியப் பங்கு வகித்த புரந்தேஸ்வரிக்கு மக்களவை சபாநாயகர் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
புரந்தேஸ்வரியும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவியும் சகோதரிகள் என்பதால், அவரும் இம்முடிவை ஆதரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.