விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ.,வும், விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளருமான புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி காலமானார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மக்களவை தேர்தலோடு விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் ஜூலை 13-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 14-ம் தேதி தொடங்கி, வரும் 21-ம் தேதி நிறைவடையவுள்ளது.
வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கு வரும் 26-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இன்று முதல் விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.