40 வயதுக்கு மேற்பட்டவர்கள் புதிய ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கோ, பழைய ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கவோ மருத்துவச் சான்றிதழ் கட்டாயம் என தமிழக போக்குவரத்து ஆணையர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய மோட்டார் வாகன விதி எண் 5-ன் படி, 40 வயதிற்கும் மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெற்ற பின்னரே புதிய ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கோ அல்லது பழைய ஓட்டுநர் உரிமத்தினைப் புதுப்பிக்கவோ இயலும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி மருத்துவர்களிடம் சான்றிதழ் பெற்று சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்வதைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சாரதி மென்பொருளில் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் தங்களது தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பதிவுச் சான்று எண்ணை பதிவு செய்ய வேண்டுமெனவும்,
இதன்மூலம் விண்ணப்பதாரர்கள் தங்களது மருத்துவச் சான்றிதழை இணைய வாயிலாகவே பெற முடியும் என்றும் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.