இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா இடையிலான பொருளாதார வழித்தடத்தை மேம்படுத்துவது குறித்து, இத்தாலியில் நடைபெற்ற ஜி-7 கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது.
சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பிய நாடுகளுக்கிடையே, ரயில் மற்றும் கப்பல் வழித்தடத்தை மேம்படுத்த ஜி-7 நாடுகள் திட்டமிட்டன. இதன்படி, இந்தியாவின் மேற்கு கடற்கரையில் இருந்து அனுப்பப்படும் பொருட்கள் கப்பல் வழியாக வளைகுடா நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து ரயில் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படும். கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த ஜி-20 மாநாட்டில் இந்த வழித்தடத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அதை செயல்படுத்துவதற்கான பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், இத்தாலியில் கடந்த 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெற்ற ஜி-7 மாநாட்டில், வளைகுடா நாடுகளில் ரயில் தடத்தை மேம்படுத்தி இந்த பொருளாதார வழித்தடத்தை செயல்படுத்துவது, என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது.