மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 15 பேர் உயிரிழந்தனர்.
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் இருந்து, கொல்கத்தா சீல்டா இடையே செல்லும் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் டார்ஜிலிங் அருகே சென்று கொண்டிருந்தது.
காலை 8:45 மணியளவில் ரங்கபானி ரயில் நிலையம் அருகே சென்ற போது சிக்னல் கிடைக்காததால் ரயில் நிறுத்தப்பட்டது. அப்போது பின்புறம் வந்த சரக்கு ரயில், கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியுள்ளது. இதில் பயணிகள் ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டன.
இந்த கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாயும் காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
இதனிடையே மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக ரயில்வே வாரிய தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெய வர்ம சின்ஹா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சரக்கு ரயிலின் லோகோ பைலட், துணை லோகோ பைலட், பயணிகள் ரயிலின் கார்டு உள்ளிட்டோர் உயிரிழந்ததாக தெரிவித்தார்.
இந்த விபத்திற்கு மனித தவறே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார். சிக்னலை பின்பற்றாமல் சரக்கு ரயில் சென்றதே விபத்திற்கு காரணம் என்றும் அவர் கூறினார்.