கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வணிகர்களுடன், திமுக நிர்வாகிகள் தொடர்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசும், காவல்துறையும் முற்றிலுமாக தோல்வியடைந்து விட்டன என்பதையே காட்டுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கள்ளச்சாராய மரணங்களுக்கு முக்கியக் காரணம் அங்குள்ள கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு திமுகவினர் கொடுத்த ஆதரவு தான் என்றும், இதனால், கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு எதிராக காவல்துறையினரால் சுதந்திரமாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை எனவும் அன்புமணி சுட்டிக்காட்டியுள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களில் கைது செய்யப்பட்டுள்ள சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் என்பவருக்கும் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பதால், கள்ளச்சாராய வணிகத்திற்கு துணை போன அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.