கள்ளச் சாராய உயிரிழப்புக்கள் நடக்கும் போதெல்லாம் , மெத்தனால் பற்றி பேசப்படுகிறது. மெத்தனால் உயிருக்கு ஆபத்து என்று பல்வேறு தரப்பினரும், கூறுகின்றனர். எனினும் அதை நாடுவது ஏன் ? மெத்தனால் எந்த வகையில் ஆபத்தானது ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
குளூகோஸ், சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளை செல்லுலார் ஆற்றலாக மாற்றி,மது வகைகள் உருவாக்கப் படுகின்றன. எத்தனால் எனப்படும் இந்த வகை, பழ வகைகளை இயற்கையான நொதித்தல் முறையில் தயார் செய்யப்படுகிறது. அதே முறையில் தான் கிராமங்களில் சாராயமும் காய்ச்சப்படுகிறது.
மண்பானையில், வெள்ளம், வாழைப் பழம், திராட்சை, புளித்த இட்லி மாவு,புளித்த தாவர தண்ணீர், ஆரஞ்சு பழத் தோல், சேர்த்து மண்ணுக்கடியில் புதைத்து வைப்பார்கள். பின்னர் பல நாட்களுக்கு பின்னர் அடுப்பில் வைத்து காய்ச்சி ,மேலே வரும் நீராவியைப் பிரித்தெடுத்து சாராயம் காய்ச்சுவார்கள்.
பின் எங்கே பிரச்சனை வருகிறது? சாராயம் எப்போது விஷ சாராயமாகிறது ?
பொதுவாக சாராயம் காய்ச்ச குறைந்த பட்சம் ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டும். விலை குறைவாக ,நிறைய போதை வரவேண்டும் என்பதற்காகவும், அதிக அளவில் உற்பத்தி செய்வதற்காகவும் உயிர்பலிகளை பற்றி கவலைப்படாமல் சாராயத்தில் அதிக அளவில் மெத்தனால் சேர்க்கிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் செத்த எலி , செத்த பல்லிகள் ,தீய்ஞ்சு போன பேட்டரிகள் என பலகெட்டுப்போன பொருட்கள் சேர்க்கப்படுவதால், அது விஷ சாராயமாகிறது.
சாராயம் காய்ச்ச மெத்தனால் தேவைப்படாது என்றாலும் , மெத்தனால் சேர்க்கப்படுகிறது. மெத்தனால் எனப்படும், மெத்தில் ஆல்கஹால் உயிருக்கே ஆபத்து வரவைக்கும் கொடிய விஷமாகும்.
மெத்தனால் உடலுக்கு மிக கெடுதல் செய்யக்கூடியது. மெத்தனாலைக் கொதிக்க வைக்கும் போது கொஞ்சம் சூடு அதிகமானாலும் விளைவு மோசமானதாகி விடும் ஆபத்திருக்கிறது.
ஆடை, பெயிண்ட், பிளாஸ்டிக் தயாரிப்பு தொழிற்சாலைகளில் மூலப் பொருளாக இந்த மெத்தனால் பயன்படுத்தப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கு வரும் மெத்தனாலில் 90 முதல் 100 சதவீதம் ஆல்கஹால் இருக்கும்.
அந்த மெத்தனாலை நீர்த்துப்போகச் செய்யாமல் அப்படியே குடித்தால் ஒரு சில நொடிகளிலேயே உயிரிழப்பு ஏற்படும்.
மெத்தனால் மனித உடலுக்குள் சென்றவுடன் எடுத்தவுடனேயே நரம்பு மண்டலம் மற்றும் உணவு மண்டலத்தைச் சீரழித்து விடும். குடித்தவருக்கு முதலில் சுகமாக இருந்தாலும்,அடுத்த சிலநிமிடங்களில் வயிறும் குடலும் வெந்து விடும். வாந்தி அதிகமாக வரும். அதன் நுரைகள் நுரையீரலுக்குள் சென்று நுரையீரலையும் பாதிப்படைய செய்யும்.
நரம்பு மண்டலம் மூலமாக , மூளைக்கும் மெத்தனால் செல்வதால் , மூளையில் செல்கள் உடனடியாக அழிந்துவிடும்.
அம்மோனியம் நைட்ரைட் அதிகஅளவில் இருந்தால், அந்த கள்ளச் சாராயத்தால் மூளையில் பாதிப்பு ஏற்படுவதோடு , தலைவலி, மயக்கம், வயிற்று வலி மற்றும் மாரடைப்பும் உண்டாகும். அதனால் மரணமடைவதற்கும் வாய்ப்புக்கள் அதிகம்.
சொல்லப்போனால் மெத்தனால் ஒரு விஷம். 10 மில்லி லிட்டர் மெத்தனால் ரத்தத்தில் கலந்தால், நுண்ணிய கண் நரம்புகள் நிரந்தரமாக பாதிக்கப்பட்டு, கண் பார்வை போய்விடும். 30 மில்லி லிட்டர் மெத்தனால் ரத்தத்தில் கலந்தால் உடனடி மரணம் நிச்சயம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
என்ன தான் மெத்தனால் விஷம் என்று கூக்குரலிட்டாலும், மெத்தனால் பயன்பாட்டுக்கு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காத வகையில் , இது போன்ற விஷ சாராய மரணங்கள் தொடர்கதையாகவே இருக்கும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.