ரஷ்யா மற்றும் வடகொரியா இடையே ஏற்பட்டுள்ள ராணுவ ஒப்பந்தம் மேற்கத்திய நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கான பின்னணி என்ன? என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.
ரஷ்யா-வட கொரியா உறவு, சோவியத் காலத்தில் இருந்ததை போல் இல்லை என்றாலும், 2000ஆம் ஆண்டு வட கொரியாவின் அதிபராக கிம் ஜாங் இருந்தபோது, வடகொரியாவுக்கு ரஷ்ய அதிபர் புதின் சென்றது இருநாடுகளுக்கும் இடையே சுமூகமான உறவை ஏற்படுத்தியது. இது மேற்கத்திய நாடுகளுக்குப் பெரும் கவலைகளையும் அச்சத்தையும் உண்டாக்கியது.
24 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வடகொரியாவுக்கு இரண்டு நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டார். 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கைக்குப் பின் புதின் மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், கொரொனா நோய் பரவலுக்குப் பின் எந்தவொரு நாட்டின் தலைவரை வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அழைத்து பேசியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வடகொரிய தலைநகர் பியோங் யாங்க் விமான நிலையத்தில் ரஷ்ய அதிபரை வட கொரிய அதிபர் நேரில் சென்று வரவேற்றார். இருவரும் ஒரே காரில் , கும்சுசான் விருந்தினர் மாளிகைக்குச் சென்றனர்.
இந்த சந்திப்பு, இரு தலைவர்களின் நட்பு மற்றும் ஒற்றுமையின் வெல்ல முடியாத நீடித்த தன்மையை வெளிக்காட்டுவதாகவும், அனைத்து உலக நீதி,அமைதி,பாதுகாப்பு ஆகியவற்றை காப்பாற்ற ஒரு அரணாக இருநாட்டு உறவும் அமைந்துள்ளதாகவும், வட கொரிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா – வடகொரியா இருநாடுகளும் புதிய உடன்படிக்கையில்,கையெழுத்திட்டுள்ளன. இந்த புதிய ஒப்பந்தத்தின் பிரிவு நான்கின் படி, ஒரு நாடு படையெடுத்து போர் நிலைக்கு தள்ளப்பட்டால், மற்றொரு நாடு ராணுவ மற்றும் பிற உதவிகளை வழங்குவதற்கு எல்லா வழிகளையும் தாமதமின்றி உடனடியாக பயன்படுத்த வேண்டும் என்று வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இருநாடுகளின் பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, கலாச்சாரம் மற்றும் மனிதாபிமான உறவுகளை உள்ளடக்கிய உறவுகளை மேம்படுத்ததும் வகையில் இந்த சந்திப்பு இருந்தது என்று இரு நாட்டு தலைவர்களும் விவரித்துள்ளனர்.
வட கொரியாவின் அணு ஆயுத சோதனைகள் மற்றும் அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பானை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த இராணுவப் பயிற்சிகள் என கொரிய தீப கற்பத்தில் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில் , ரஷ்ய அதிபரும், வட கொரிய அதிபரும், முக்கிய இராணுவ ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இருப்பது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ரஷ்யா வட கொரியா ஒப்பந்தம் பற்றி, தென் கொரியா எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.