சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தைத் தனியார் வசம் ஒப்படைக்க உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த 2009-ஆம் ஆண்டில் ஒப்புதல் அளித்தது. அதன்பின்னர், ஆறு ஆண்டுகள் கழித்து முதல்கட்டமாக கோயம்பேடு-ஆலந்தூர் இடையே மெட்ரோ சேவை தொடங்கியது.
பின்னர், அவுட்சோர்ஸிங் எனப்படும் அயலகப் பணி திட்டத்தின்கீழ் மெட்ரோ சேவையில் தனியாரும் ஈடுபடுத்தப்பட்டனர். அந்த வகையில் 50 சதவீத தனியார் ஊழியர்களுடன் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இதன்மூலம் ஆண்டுக்கு நூறு கோடி ரூபாய் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் சேமிக்கப்படுகிறது. இந்த நிலையில், பூந்தமல்லி முதல் போரூர் வரை நடைபெற்று வரும் 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டத்தில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்த உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் மற்றும் ரயில் நிலையங்களை தனியார் நிர்வகிக்க வழிவகை செய்யும் இந்தத் தீர்மானத்துக்கான டெண்டர் விரைவில் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.